×

நள்ளிரவில் பயங்கரம் ராமேஸ்வரம் மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: ஒருவர் முகத்தில் குண்டு பாய்ந்தது

ராமேஸ்வரம்:  இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்கச்சிமடம் மீனவர் முகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்த செல்லுமாறு மீனவர்களை  எச்சரித்ததோடு, திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுமார் 15 நிமிடங்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், தங்கச்சிமடம் மீனவர் கிங்ஸ்டனுக்கு சொந்தமான படகில் இருந்த சேசு(55) என்பவரின் முகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் அவரது கண்ணுக்கு அருகில் பலத்த காயம் ஏற்பட்டு  அதிகளவில் ரத்தம் வெளியேறியது. விசைப்படகும் சேதமடைந்தது.
இதனால் படகில் இருந்த உரிமையாளர் கிங்ஸ்டன், ஓட்டுனர் மெக்கான்ஸ், மீனவர்கள் மாரியப்பன், அஜித், முருகன் ஆகியோர் உடனடியாக படகை கரைக்கு திருப்பினர்.

 நேற்று அதிகாலை மூன்று மணியளவில் ராமேஸ்வரம் துறைமுகத்தை வந்தடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர் சேசுவை உடனடியாக கார் மூலம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தகவல் அறிந்த மத்திய, மாநில புலனாய்வு துறையினரும், ராமேஸ்வரம் போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடந்த படகை நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து படகில் சென்ற மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்ைல என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி?
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து படகு உரிமையாளர் தரப்பில் இருந்து ராமேஸ்வரம் போலீஸ் மற்றும் மரைன் போலீசாருக்கு நேற்று காலை 10 மணி வரை எவ்வித புகாரும் செய்யப்படவில்லை. இதையறிந்த புலனாய்வு துறையினர்  மேற்கொண்ட ரகசிய விசாரணையில், காயம்பட்ட மீனவருடன் கரை திரும்பிய மீனவர்கள் முதலில் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மீன்வளத்துறை ஆலோசனைப்படியே யாருக்கும் தகவல் தெரிவிக்காமல்  பாதிக்கப்பட்ட மீனவரை மதுரைக்கு காரில் கொண்டு சென்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வெளியே தெரியாமல் மறைப்பதற்காகவே, மீன்வளத்துறையினர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்தது. இது குறித்து புலனாய்வு  துறையினர் தங்களது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



Tags : Sri Lanka Navy ,fishermen ,Rameshwaram , Terror,midnight, Rameshwaram,fishermen , face
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக...