அரசு வேலை வாங்கி தருவதாக 74 பேரிடம் 1.80 கோடி மோசடி: தலைமறைவானவர் வங்கி கணக்குகள் முடக்கம்

புதுக்கோட்டை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தென்மாவட்டங்களை சேர்ந்த 74 பேரிடம் ரூ.1.80 கோடி மோசடி செய்த தூத்துக்குடி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி கோரம்பள்ளம் பிஎஸ்பி நகரைச் சேர்ந்தவர் கோயில்ராஜ். இவர் தூத்துக்குடி டூவிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு ஊழியராக தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்த தனசேகரன் மனைவி சுதா  என்பவர் பணியாற்றி வந்தார். தூத்துக்குடி புதுக்கோட்டை நியூ காலனியைச் சேர்ந்த கனகராஜ்(36), சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நர்ஸ் பயிற்சி முடித்துள்ளதால் அவருக்கு அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு தேடி  வந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் வசிக்கும் கனகராஜின் சித்தப்பா நடராஜ் மூலம் கோயில்ராஜ் அறிமுகமானார். அவர் கனகராஜ் மனைவிக்கு அரசு மருத்துவமனையில்  வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் பேரம் பேசி கடந்த 5-6-2017ல்  ரூ.50 ஆயிரத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இதுபோல் நெல்லை உள்பட பல்வேறு இடங்களை சேர்ந்தவர்களும் வேலை கேட்டு கோயில்ராஜிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் வேலை வாங்கித் தரவில்லையென தெரிகிறது.இதுகுறித்து கனகராஜ், தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோயில்ராஜ், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி திருச்சி,  திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்செந்தூர், விருதுநகர், ஓட்டப்பிடாரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த 74 பேரிடம் ரூ.1.80 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோயில்ராஜ் தலைமறைவானார்.  இதனால் அவரது இரண்டு வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: