யாரும் அச்சப்பட தேவையில்லை வேளாண் மண்டல சட்டம் பாதுகாப்பானது: சட்டப்பேரவையில் முதல்வர் இபிஎஸ் பேச்சு

சென்னை : வேளாண் மண்டல சட்டம் பாதுகாப்பானது என்றும் இது தொடர்பாக யாரும் அச்சப்பட தேவையில்லை என்று முதல்வர் இபிஎஸ் தெரிவித்தார்.பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலம் குறித்த சட்டமுன்வடிவு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் பேசியதாவது : காவரி டெல்டா பகுதியானது சுமார் 28 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 33 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குகிறது.  இப்பகுதி விவசாயிகள் வெள்ளம், வறட்சி மற்றும் புயல் போன்ற  இயற்கை சவால்களை அடிக்கடி எதிர்கொண்டாலும், விவசாய உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.   காவேரி டெல்டா பகுதியானது, தொல்லியல் மற்றும் கலாச்சார பாரம்பரியமிக்க மண்டலமாகும்.  ஹைட்ரோர கார்பன் திட்டங்களால் கலாச்சா பாரம்பரிய சின்னங்கள் சேதம் அடையும் ஆபத்து உள்ளது.  இதனால், இப்பகுதியை பாதுகாக்க  வேண்டியது அவசியமாகிறது. எனவே கடந்த 9ம் தேதி காவேரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் சில டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற  அறிவிப்பை நான் வெளியிட்டேன். மறுநாளே இவ்வறிப்பு  தொடர்பாக இயற்றப்படும் சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டி மத்திய அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதினேன்.

விவசாயிகளின் நலன்களை கருத்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவருகிறது. 2016-2017ல் நிலவிய வறட்சியின் பிடியில் இருந்து விவசாயிகளைக் காக்க வறட்சி நிவாரணமாக 2,247 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 2011ம் ஆண்டு முதல் இது வரை சுமார் 90 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில், 48  ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் மற்றும் அவர்தம் குழந்தைகளின் பல்வேறு நிவாரணங்களுக்காக இதுவரை 1,868 கோடி ரூபாயை தமிழக அரசு  வழங்கியுள்ளது.   தென்னை விவசாயிகள் அதிக லாபம் ஈட்டும் வகையில் தென்னம்பாளையிலிருந்து “நீரா”  பானத்தை உற்பத்தி செய்வதற்கு உரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு மேற்கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. பழங்கள்  மற்றும் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளின் அறுவடைக்குப்பின் இழப்பினைக் குறைக்க, 585 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தினை  செயல்படுத்தி வருகிறது.

அதேபோல, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 217 கோடி ரூபாய் மதிப்பில் உணவுப் பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பரம்பிக்குளம், முல்லைப்பெரியாறு போன்ற பிரச்னைகளில் தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், பிற நடவடிக்கைகளையும்தொடர்ந்து எடுத்து வருகிறது. அதற்கு உதாரணமாக, மேற்கண்ட நதிநீர் பிரச்சனைகள் சம்பந்தமாக, மாண்புமிகு கேரள முதலமைச்சரை  நானே நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினேன். இது தொடர்பாக பல திட்டங்களை தமிழக அரசு  செய்துவருகிறது. காவேரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான அறிவிப்பினை கடந்த 9ம் தேதி நான் வெளியிட்டேன்.  அதற்குப் பிறகு, பத்தே நாட்களில் பல சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து, அதற்கான சட்டத்தினைக் கொண்டு வந்து இந்த அவையில்  அறிமுகப்படுத்தி உள்ளோம்.  விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த சட்டம் வரலாற்று சிறப்புமிக்க சட்டம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சட்டம், பாதுகாப்பான சட்டம், யாரும்  அச்சப்பட வேண்டியதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: