×

திருப்பூர் அருகே அதிகாலையில் கோர விபத்து லாரியில் இருந்த கன்டெய்னர் சரிந்து சொகுசு பஸ் மீது மோதி 19 பேர் பலி: 25 பேர் படுகாயம்

திருப்பூர்: திருப்பூரில் சொகுசு பஸ் மீது, லாரியில் ஏற்றப்பட்ட கன்ெடய்னர் சாய்ந்து அமுக்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கேரள அரசின் சொகுசு பஸ், எர்ணாகுளத்துக்கு கிளம்பியது. பஸ்சில் டிரைவர், மாற்று டிரைவர், கிளீனர் மற்றும் 11 பெண்கள், 37 ஆண்கள்  என மொத்தம் 48 பேர் பயணம் செய்தனர். இந்த பஸ் நேற்று காலை 7 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைவதாக இருந்தது. அதிகாலை 3.10 மணியளவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ராக்கிபாளையம் பகுதியில் பஸ் சென்று  கொண்டிருந்தது. அப்போது எதிரே, கேரளாவில் இருந்து சேலம் நோக்கி டைல்ஸ் பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது. இந்த லாரி திடீரென நிலை தடுமாறி ஓடி, அதிவேகமாக சென்டர் மீடியனை உடைத்து எதிர்திசை  ரோட்டுக்கு சென்றது.

இதனால் லாரியில் இணைக்கப்பட்டிருந்த ராட்சத கன்டெய்னர் எதிரே வந்துகொண்டிருந்த கேரள பஸ் மீது சாய்ந்து நசுக்கியது. வேகம் குறையாமல் லாரியும், பஸ்சும் ஓடியதால் கண்டெய்னரின் கூர்மையான பகுதி பஸ்சின் பக்கவாட்டை  கிழித்துக்கொண்டு சென்று நின்றது. இந்த கோர விபத்தில், பஸ்சின் டிரைவர் பக்க பகுதி முழுவதும் நொறுங்கியது. இதனால், இரும்புத்தகடுகள் குத்திக்கிழித்ததில், பஸ் டிரைவர், 4 பெண்கள் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  25 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் திருப்பூர் மற்றும் அவிநாசி தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் வந்து பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய பயணிகளை மீட்டு, கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.  சடலங்களும் மீட்கப்பட்டன. அவ்வழியே வந்த வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் ரோட்டில் திருப்பி விடப்பட்டன. விபத்து நடந்த இடத்தை திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், போலீஸ் எஸ்பி. திஷாமித்தல், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட கலெக்டர் பாலமுரளி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு விசாரித்தனர்.  மேலும் கேரள அரசு சார்பில்  உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.இதனிடையே லாரி டிரைவர் ஹமராஜ் (44) கைது செய்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.மு.க.ஸ்டாலின் இரங்கல்: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல்தெரிவித்துள்ளார்.

லாரி டிரைவர் தூங்கியதே விபத்துக்கு காரணம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ‘கேரளாவில் இருந்து ஒரு குழு பாலக்காடு கலெக்டர் தலைமையில் வந்தது. அவர்கள், பிரேத பரிசோதனைக்கு பிறகு, உடல்களை அடையாளம் கண்டு பெற்றுச்சென்றனர். காயம்  அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்டெய்னர் லாரியை தூக்க கலக்கத்தில் டிரைவர் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது’ என்று கூறினார்.

விபத்தில் உயிர் தப்பிய தம்பதி
விபத்தில் உயிர் தப்பிய ஆயுர்வேத மருத்துவர் ஜோர்டன் (37) கூறியதாவது: நானும் மனைவி அனுவும் சவுதி பீரோ மெட்ரிக் தேர்வு எழுதுவதற்காக பெங்களூர் சென்று விட்டுவிட்டு, பாலக்காடு திரும்புவதற்காக இந்த பஸ்சில் ஏறினோம். பஸ் டிரைவரின் எதிர்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து தூங்கிவிட்டோம். கண்  விழித்து பார்த்தபோதுதான் நான் மருத்துவமனையில் இருந்தது தெரிந்தது. என் மனைவி அனுவுக்கு காயமில்லை என்றார்.

Tags : container crashes ,Tirupur ,container ,bus crashes , Early accident ,Tirupur, truck ,luxury bus crashes ,bus
× RELATED வேட்பாளர் மாலை அணிவித்தபோது...