×

சித்தூர் அருகே புதையல் எடுக்க முயற்சி மின்சாரம் தாக்கியதில் இரண்டு பேர் படுகாயம்

* தலைமறைவான சென்னை சாமியார்
* நரபலி கொடுக்க முயற்சியா என விசாரணை

சித்தூர்: ஆந்திராவின் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கங்கி ரெட்டி, கணேஷ், ஹரிஷ், குருபிரசாத், ரமேஷ். இவர்கள் 5 பேரும், சென்னையைச் சேர்ந்த சாமியார் ஜெயக்குமாரிடம் தங்கள் கிராமத்தில் தங்கப்புதையல் இருப்பதாகவும் அதை எடுத்து தந்தால் சமபங்கு தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 18ம் தேதி சாமியார் ஜெயக்குமார் சென்னையில் இருந்து புதையல் எடுப்பதற்காக காட்டூர் வந்தார்.பின்னர், 6 பேரும் அதே பகுதியில் உள்ள  கம்சலோனிகொண்ட வனப்பகுதிக்கு புறப்பட்டனர். அப்போது விவசாய நிலத்தை தாண்டி வனப்பகுதிக்கு செல்ல முயன்றனர்.இதில், காட்டு பன்றிகளுக்காக வைக்கப்பட்ட மின் ஒயரில் சிக்கி ஜெயக்குமார் மற்றும் கணேஷ்  ஆகியோர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து கணேஷ் திருப்பதி ரூயா  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் ஜெயக்குமார்  தமிழகத்திற்கு  சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி சென்று விட்டாராம்.  

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷின் சகோதரர் சுரேஷ் நேற்று  முன்தினம் பலமநேர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘புதையல் எடுக்க சென்றபோது மின்சார ஒயரில் சிக்கி மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்ததாக தெரிவிக்கின்றனர். ஆனால்,  அங்கு ஆளை புதைக்கும் அளவுக்கு குழியும் தோண்டப்பட்டுள்ளது. இதனால் கணேஷை நரபலி கொடுக்க முயன்றார்களா என விசாரணை நடக்கிறது’’ என்றனர்.

Tags : persons ,Chittoor , treasure ,Chittoor, power supply, injured
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...