வெள்ளிக்கிழமைதோறும் விரதமும் இருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கோயில் கட்டி வழிபடும் தெலங்கானா விவசாயி: இந்தியா வரும் போது சந்திக்க வாய்ப்பு கேட்கிறார்

திருமலை: தெலங்கானாவில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விவசாயி ஒருவர் கோயில் கட்டி வழிபட்டு வருகிறார். இதற்கிடையே இந்தியா வரும் அவரை சந்திக்க வாய்ப்பு கேட்டு விவசாயி வலியுறுத்தியுள்ளார்.தெலங்கானாவின், கோனே கிராமத்தை சேர்ந்தவர் புசா கிருஷ்ணா(40), விவசாயி. இவர் தனது வீட்டு வளாகத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு அவரது நடவடிக்கையால் கவரப்பட்ட கிருஷ்ணா, டிரம்புக்கு 6 அடி உயர சிலை அமைத்தார். அன்று முதல் தினமும் வழிபட்டு வருகிறார்.

டிரம்ப்பை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதே அவரது நீண்ட நாள் ஆசை. இந்நிலையில் வருகிற 24ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம்  மேற்கொள்ளவுள்ள டிரம்ப்பை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாநில அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், புசா கிருஷ்ணா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து விவசாயி புசா கிருஷ்ணா  கூறியதாவது: அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள் என்னை மிகவும் ஈர்த்தது. அவரது தீவிர ரசிகராக  மாறினேன். இதனால் டிரம்புக்கு கோயில் கட்டி தினந்தோறும் அவரது சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்வதோடு, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வருகிறேன். நமது கலாசாரம், பண்பாடுகள் அவருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறேன். டிரம்ப்பை சந்திக்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை. அதனை தற்போது இந்திய அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: