வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள சட்டப் பிரிவு 371-ஐ ரத்து செய்யமாட்டோம்: அமித்ஷா உறுதி

இட்டாநகர்: ‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது போல் வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள சட்டப்பிரிவு 371-ஐ ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை,’ என அமித்ஷா உறுதியளித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் அமலில் இருந்த சட்டப்பிரிவு 370, கடந்த ஆண்டு மத்திய அரசால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதேபோல், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பு சட்டப்பிரிவு 371 அமலில் உள்ளது. அந்த மாநிலங்களை சேர்ந்த மக்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் இயற்றப்பட்ட இந்த சட்டம் ரத்து செய்யப்படும் என பரவி வரும் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார். இது தொடர்பாக இட்டாநகரில் நேற்று நடைபெற்ற அருணாசல பிரதேச மாநிலம் உருவான 34வது தினவிழா பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: பிரதமராக மோடி பொறுப்பேற்ற கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் பிறபகுதியுடன் புவியியல் அடிப்படையில் மட்டுமே இணைந்திருந்தன.

ஆனால், மோடி அரசு பதவியேற்ற பிறகே இந்த பகுதி நாட்டின் மற்ற பகுதியுடன் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது போல், வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள 371வது சட்டமும் ரத்து செய்யப்படும் என்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. இந்த பகுதியில் உள்ள தீவிரவாதிகள் பிரச்னை, மாநிலங்கள் இடையேயான எல்லை தகராறு ஆகிய பிரச்னைகளை தீர்க்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டில் நாங்கள் மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது வடகிழக்கு மாநிலங்கள் தீவிரவாத பிரச்னை, மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்னைகள் இல்லாத மாநிலங்களாக மாறியிருக்கும் என்றார்.

Related Stories: