ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல்; ராகுல் கண்டனம்

புதுடெல்லி: ராஜஸ்தானில் 2 தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் கடுமையாக தாக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் பகுதியில் உள்ள மெக்கானிக் கடைக்கு கடந்த 16ம் தேதி இரு தாழ்த்தப்பட்ட  வாலிபர்கள் வந்துள்ளனர். அப்போது, கடையில் இருந்த பணம் காணாமல் போனதாக கூறி இருவரையும் 7 பேர் சேர்ந்து கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி, காண்போரை அதிர்ச்சி அடையச் செய்தது.இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், ‘ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் பகுதியில் 2 தாழ்த்தப்பட்ட  வாலிபர்கள் தாக்கப்பட்டச் சம்பவம் கொடூரமானது. இந்த கொடூர சம்பவத்தை செய்தவர்களை நீதியின் முன் நிறுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,’ என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு தாழ்த்தப்பட்ட  மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அம்மாநில பாஜ குற்றம்சாட்டி உள்ளது. ராகுலின் டிவிட்டை தொடர்ந்து அதற்கு பதிலளித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ‘இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள். சட்டத்தின்படி அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: