23 கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஒப்புதலுடன் மாநிலங்களவை நடத்தை விதிகளில் மாற்றம்: 77 விதிகள் திருத்தம், 124 புதிய விதிகளுக்கு பரிந்துரை

புதுடெல்லி: இருபத்து மூன்று கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஒப்புதலுடன் மாநிலங்களவை நடத்தை விதிகளில் மாற்றம் செய்ய வசதியாக 77 விதிகளில் திருத்தம் செய்யப்பட்டும், 124 புதிய விதிகளை வகுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு தலைமையில் மாநிலங்களவையின் பொது நோக்கங்கள் குழுவின் கூட்டம் நடந்தது. அதில், 23 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநிலங்களவையின் பழமையான நடைமுறைகளை மாற்றவும் புதிய நடைமுறைகளை வகுக்கவும் மீளாய்வுக் குழு கடந்த 2018 மே மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழுவானது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் விதிகள்,  நடைமுறைகள், உத்தரவுகள் குறித்த ஆய்வு நடத்தியது.  மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு மற்றும் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் பல்வேறு கட்சிகளின்  உறுப்பினர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

பிற ஜனநாயக நாடுகளின் சிறந்த  நடைமுறைகளும் ஆராயப்பட்டன. கிட்டதிட்ட 51 சுற்று சந்திப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அந்த குழுவானது தனது பரிந்துரைகளை மாநிலங்களவை தலைவரிடம் சமர்பித்துள்ளது. இதுதொடர்பாக ேநற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், தற்போதுள்ள விதிகளில் 77 திருத்தங்கள் செய்யப்பட்டும் மற்றும் 124 புதிய விதிகள் வகுக்கவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவை அதிகாரிகள் கூறுகையில், “விதிகளை மறுஆய்வு செய்வதால், தற்போதைய சில தெளிவற்ற விதிகளுக்கு தீர்வு காண முடியும். சபை நடவடிக்கைகள் சரியாக நடக்க வசதியாக, கடந்த காலங்களில் நடந்த ஒழுங்கற்ற மற்றும் எதிர்பார்க்கப்படாத  நிகழ்வுகளை தவிர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1964ம் ஆண்டுக்கு பின்னர் மிக விரிவான முறையில் விதிகள் திருத்தப்பட உள்ளது’’ என்றனர்.

Related Stories: