உலக தாய்மொழி நாள் முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை: உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தி: உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியைப் போற்றிப் பாதுகாத்திடும் வகையில் உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21ம் நாளன்று, தமிழ்மொழியின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்திடும் விதமாக மாநில அளவில் கவியரங்கம், கருத்தரங்கம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.தமிழக அரசு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனைப் பேணிக் காத்திடும் வகையிலும் பல்வேறு விருதுகளை வழங்கி வருவதோடு, தமிழறிஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தேவநேயப் பாவாணர் விருது, அருள் நிறை காரைக்கால் அம்மையார் விருது, வீரமாமுனிவர் விருது, சி.பா.ஆதித்தனார் நாளிதழ் விருது, சி.பா.ஆதித்தனார் வார இதழ் விருது, சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது ஆகிய புதிய விருதுகளை அறிவித்து, விருதுகளின் எண்ணிக்கையை 72 ஆக உயர்த்தியுள்ளது.

மேலும், தமிழ்மொழியின் சிறப்பினை ஆவணப்படுத்தி உலகெங்கும் கொண்டு செல்லவும்,  ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 10 கோடி ரூபாயும், ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 1 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.  தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான 1.11.1956  நாளினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட அறிவிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு 1.11.2019 அன்று மாநில அளவில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது.உலகத் தாய்மொழி நாளான இந்த இனிய நாளில், தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: