திருச்சி, கரூர், அரியலூரை விட்டது ஏன்? திமுக -அதிமுக காரசார விவாதம்

சென்னை: திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்காதது ஏன்? என்பது குறித்து திமுக -அதிமுக இடையே காரசார விவாதம் நடந்தது. காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்க வகையும் சட்ட முன்வடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இந்த சட்ட முன்வடிவு மீதான விவாதம் நடந்தது. இதில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: ஏற்கனவே புதிதாக அமைக்கப்பட்டுள்ள  342க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்கும் வகையில் இந்த சட்ட முன்வடிவு அமைந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பாதுகாக்கக்கூடிய வேளாண் மண்டல பட்டியலில் டெல்டா மாவட்ட பட்டியலில் இருக்கக் கூடிய திருச்சி, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் விடுபட்டு இருப்பதற்கு என்ன காரணம். வேளாண் நிலங்களை பிளாட் போட்டு விற்கிறார்கள்.

எனவே, வேளாண் நிலங்களை ரியல் எஸ்டேட் பயன்படுத்த தடை விதிக்கப்படவில்லை.  இதே மாதிரி குஜராத் மாநிலத்தில் கடந்த 2001ல் குஜராத் காஸ் ஒழுங்குமுறை ஆணையம் அமைத்தார்கள். மத்திய அரசு பட்டியலில் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் அந்த ஆணையத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பை மாநில அரசு கவனத்தில் கொண்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆகவே விவசாயிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்க கூடிய வகையில் சிறப்பான பாதுகாப்பு வேளாண் மண்டலம் கொண்டு வர ஏதுவாக இந்த சட்டமுன்வடிவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி: இதற்கு முன்பாக அமைக்கப்பட்ட பெட்ரோலிய சம்பந்தப்பட்ட கிணறுகளை எப்படி கையாள்வது என்பதை சரியாக கூறவில்லை. எனவே சட்ட முன்வடிவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புங்கள். விவாதம் செய்து ஒரு முடிவுக்கு வரலாம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல் உருவாகும். திருச்சி தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால்,  அது பாதுகாக்கப்பட்ட மண்டலத்துக்குள் கொண்டு வரப்படவில்லை. கரூர், திருச்சி, அரியலூர் சில பகுதிகளை வேளாண்மண்டலத்தில் இணைத்துள்ளோம்.  மு.க.ஸ்டாலின்: இந்த சட்ட முன்வடிவை திமுக வரவேற்கிறது என்பதில் எந்த சந்தேகமும் படவேண்டிய அவசியம் இல்லை. முதலமைச்சர் சில விளக்கங்கள் தந்திருக்கிறார். இருந்தாலும் இதை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி அதில் விவாதிக்கப்பட்டு, அங்கு எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு தீர்வு வந்தால்தான், இது முழுமையான அளவுக்கு வெற்றி பெறும் என்று நாங்கள் கருதுகிறோம்.

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் : . ஹைட்ரோ கார்பன் வேறு. எண்ணெய் கிணறு என்பது வேறு. 2011ல் தான் ஹைட்ரோ கார்பன் ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து திட்டம் அனுமதிக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது.

எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் : நாங்கள் இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை. தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி : வேளாண் மண்டல சட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும். பல ஆண்டுகால விவசாயிகளின் கோரிக்கை அனைவரின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றியிருக்க வேண்டும். இதை தொடர்ந்து அந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Stories: