சட்டவிரோத குடிநீர் நிறுவனம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை:சென்னையில்  நிலத்தடி நீரை பாதுகாக்க தகுந்த நடவடிக்க எடுக்க வேண்டும் எனவும்,  இதுகுறித்து தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் புழல் பகுதியைச்  சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இதை விசாரித்த நீதிமன்றம், மாநிலம் முழுவதும் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக  செயல்படும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என்றும்,  அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி 24ம்  தேதி உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக  தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அது,  உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்  அரிமா சுந்தரம் தனது வாதத்தில், “பொதுநலன் கருதி 4 நிறுவனங்களை தடை  செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழகம் முழுவதும்  உள்ள நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த வழக்கில்  எதிர்மனுதாரராக சேர்த்து எங்களது தரப்பு வாதங்கள் எதையும் கேட்காமல்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த தடை உத்தரவால் குடிநீர்  உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். அதனால் இந்த விவகாரத்தில்  உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.இதையடுத்து  நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரத்தில் எந்த உத்தரவையும்  பிறப்பிக்கப்போவது இல்லை என்று உத்தரவிட்டார்.

Related Stories: