×

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானம் ஜூரோ தான் : மத்திய அரசு திட்டவட்டம்

சென்னை : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானம் ஜூரோ தான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

வழக்கின் பிண்ணனி

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இந்த பரிந்துரை மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருக்கபட்டதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நளினி சட்டப்பூர்வ காவலில் இருக்கிறாரா அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா என்பது குறித்து தெளிவுபடுத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

மத்திய அரசு வாதத்தால் பரபரப்பு

இந்தநிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, 7 பேர் விடுதலை செய்வதில் தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தமிழக அரசு எடுத்த முடிவு மதிப்பு இல்லாதது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். தங்கள் பரிந்துரையின்றி 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் திட்டவட்டமாக தெரிவித்தார்.7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்துவிட்டது என்று மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் முன் வைத்த வாதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீர்மானத்தின் மீது ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காதவரை சட்டவிரோத காவலில் உள்ளதாக கருத முடியாது என்றும் மத்திய அரசு ஒப்புக்கொள்ளும் வரையிலும் தமிழக அரசின் விடுதலை தீர்மானம் பூஜ்யம் தான் எனவும், தெரிவித்த நிலையில், நளினியின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வாதம்

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டப்பிரிவு 435ஐ குறிப்பிட்டு விடுவிக்குமாறு நளினி கோர முடியாது. 14 ஆண்டு, அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் மட்டுமே விடுதலை கோர முடியும்.தூக்கு தண்டனை வழங்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதால் விடுவிக்க கோர முடியாது.தீர்மானத்தை பரிந்துரைக்க மட்டுமே முடியும்.ஆளுநரே முடிவு எடுப்பார்.ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளது, அதில் தலையிட முடியாது என்று வாதிட்டார்.

நளினி வாதம்

இதைத் தொடர்ந்து வாதத்தை பார்க்கும் போது, தமிழக அரசை மத்திய அரசு நடத்துகிறாதா என சந்தேகம் எழுகிறது என்றும் மாநில அரசின் முடிவுகளை நடைமுறைப்படுத்தவே ஆளுநர் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.இதையடுத்து எழுத்துப் பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், சட்டவிரோத காவலில் இருக்கும் தன்னை விடுவிக்க கோரிய நளினி மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.


Tags : government ,release ,Government of Tamil Nadu ,juror , Tamil Nadu Government, Wadham, Nalini, Wadham, Terrorist, Liberation, Central Government
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...