காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா..: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்டவை எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு இந்த பகுதி தரிசு நிலமாக மாறும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலை மாற டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி, நேற்று மாலை நடைபெற்ற முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்கவும் அதில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வகை செய்யும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்ட மசோதாவை முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு வேளாண் மண்டல மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இனி தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளாகும். வேளாண் பயன்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களுமே வேளாண் நிலம் என பொருள்படும், என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியுள்ள நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டவுடன் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்துள்ளார். இதனிடையே சட்டத்தை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: