தமிழகத்தில் ஐ.ஜி.க்களாக உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை : தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக போலீசில் உள்ள அதிகாரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு ஏ.டி.ஜி.பி. பதவியில் உள்ளவர்களுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.அதே போல் அதற்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இதையடுத்து 2020 – 21ம் ஆண்டிற்கான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அதுகுறித்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. அதன்படி தமிழகத்தில் 43 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் அனுமதித்துள்ளது.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் , உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் அடங்கிய குழு பதவி உயர்வு பட்டியல் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியது.

இது தொடர்பாக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில், தற்போது ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம், சந்திப் மிட்டல், பாலநாகதேவி, சேசசாயி ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி., அந்தஸ்து வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளும் 1995ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டு, புதிய பணியிடங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Related Stories: