ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

சென்னை: ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று சபாநயகர் தனபால் கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்றதும் பிப்ரவரி 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை.

இதையடுத்து திமுக தரப்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக திமுக சட்டசபை கொறடா சக்கரபாணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வதி பற்றி சபாநாயகரே முடிவெடுக்கலாம், என தெரிவித்தது. மேலும், இவ்விகாரத்தில் முடிவெடுக்க சபாநாயகருக்கு கால அவகாசம் எதுவும் விதிக்க முடியாது என கூறிய நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில், 2020-2021ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று பேரவையில் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 11 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார். மேலும் சபாநாயகர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது, என்றார். ஆனால், மு.க.ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர், தமது பரிசீலனையில் உள்ள விஷயத்தை சட்டப்பேரவையில் பேச முடியாது என விளக்கம் அளித்தார். மேலும் பேசிய அவர், 11 எம்.எல்.ஏக்கள் விவகாரம் என்னுடைய ஆய்வில் உள்ளது; என்னை யாரும் வற்புறுத்த முடியாது. ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறியுள்ளார்.

Related Stories: