மதம் குறித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் கேட்கப்படுவது இல்லை :ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் விளக்கம்

சென்னை : தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை என்று பேரவையில் ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் இவ்வாறு பதில் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் 4வது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது தேசிய மக்கள் பதிவேடு குறித்து சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். என்பிஆர் தொடர்பாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன என்பதை பட்டியலிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, அதன் மீது உரையாற்றினார்.

Advertising
Advertising

மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்

அப்போது ஸ்டாலின் பேசியதாவது,தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பில் என்ன பிரச்சனை உள்ளது என்று பட்டியலிட தயார்.தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. என்பிஆர் தமிழகத்தில் நடத்தப்படாது என அறிவிக்க வேண்டும். என்பிஆர்  தயாரிக்க புதிய படிவம் கேட்கப்படுகிறது. பண்டிகை பட்டியல் கேட்கப்படுகிறது.இஸ்லாமியர் பண்டிகை கேட்கப்படாததே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. என்பிஆரை அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியை அரசு வழங்குமா?.தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக் கூடாது என்று பல்வேறு கட்டமாக தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது  சிஏஏ தமிழர்கள் அனைவருக்கும் எதிரானது. இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் விளக்கம்

இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் 14 விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மதம் குறித்த தகவல்களை கொடுக்க வேண்டியதில்லை.கணக்கெடுப்பின் போது மக்கள் வாயமொழியாக சொன்னால் போதும், ஆதாரம் வழங்க தேவையில்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பில் கூடுதலாக சேர்க்கப்பட்ட கேள்விகள் பற்றி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இன்னும் பதில் வரவில்லை. 30 ஆண்டுகளாக சிறுபான்மை மக்களுக்கு அதிமுக பாதுகாப்பு அரணாக இருந்துள்ளது.வாக்கு வங்கிக்காக மக்களை திசைதிருப்பும் விஷம பிரச்சாரம் எடுபடாது.பாவம் செய்தது நீங்கள், பழியை எங்கள் மேல் சுமத்த பார்க்கிறீர்கள்.சிஏஏவால் என்ன பாதிப்பு வருகிறது என சொல்லுங்கள், புரியவில்லை, என்றார்.

Related Stories: