×

'பூங்காற்று திரும்புமா...என் பாட்டை விரும்புமா': இன்று மலேசியா வாசுதேவன் நினைவு நாள்

தமிழ் திரையிசை உலகில் எத்தனையோ பாடகர்கள் உள்ளனர். அந்த பாடகர்களே வியக்குமளவுக்கு பிரதி எடுத்து பாடுபவர்கள் ஏராளம். ஆனால், ஒரு சில குரல் அதற்கு விதிவிலக்கு. அப்படி ஒரு அற்புதமான பின்னணி பாடகர்தான் மலேசியா வாசுதேவன். இன்று அவருக்கு 9வது ஆண்டு நினைவு தினம். அவரைப்பற்றி தெரிந்து கொள்வோமா?
மலேசியா வாசுதேவனின் பூர்வீகம் கேரளா. 1944, ஜீன் 15ம் தேதி பாலக்காடில் பிறந்தவர். இவரது இளம்வயதிலேயே பெற்றோர் மலேசியாவுக்கு குடி பெயர்ந்தனர். அப்போதுதான் வாசுதேவன் அங்குள்ள ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார். நாடகத்திலும் நடித்து வந்தார்.  அப்படித்தான் அவருக்கு எம்.எஸ்.விஸ்வநாதன்,  ஜி.கே.வெங்கடேஷ், வி.குமார், இளையராஜா, எஸ்பிபி போன்றவர்கள் அறிமுகமாயினர்.

1972ல் அப்போது பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் வி.குமார் இசையில், ‘டில்லி டூ மெட்ராஸ்’ என்ற படத்தில்தான் முதன்முதலில், மலேசியா வாசுதேவன், ‘‘பாலு விக்கிற பத்மா... உன் பாலு ரொம்ப சுத்தமா...’’ என்ற பாடலை பாடினார். அதன்பிறகு இவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ‘16 வயதினிலே’ படத்தில் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடலை மாறுபட்ட குரலில் பாட வேண்டும். அப்போது எஸ்பிபிக்கு தொண்டை கட்டியதால், டிராக் பாடுவதற்காக அழைக்கப்படுகிறார் மலேசியா வாசுதேவன். ஒரு முதல் பாடல் என்ற எண்ணத்துடனே அந்த பாடலை சிறப்பாக பாடி முடித்தார். அதை கேட்ட அனைவரும் ஒருமித்த குரலில் பாராட்டு தெரிவிக்க, இவரது இசைப்பயணத்தின் 2வது இன்னிங்ஸ் இளையராஜாவோடு இனிதே துவங்கியது.தொடர்ந்து அவர் பாடிய பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆயின. 80களில் வானொலியில் இவர் பாடல் ஒலிக்காத நாளே இல்லை எனலாம். ‘மலர்களே நாதஸ்வரங்கள்’, ‘கோடைக்கால காற்றே’, ‘இந்த மின்மனிக்கு கண்ணில் ஒரு’, ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘ஆகாய கங்கை’, ‘கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ’, ‘பூவே இளையபூவே’ என அடுத்தடுத்த மெஹா ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் காதுகளில் இசைத்தேனை பாய்ச்சினார்.

அது மட்டுமா...? குத்துப்பாட்டு என்றாலும் கூப்பிடு மலேசியாவை என்று கொடுக்கத் தொடங்கினர். ‘வெத்தலையை போட்டேண்டி’, ‘நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என குத்துப்பாட்டு ஏரியாவிலும் கலக்கினார். பாட்டை தொடர்ந்து நடிப்பிலும் சிறந்து விளங்கினார். ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில், இவரது வில்லன் வேடம் பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து வில்லன், குணச்சித்ர வேடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
‘சாமந்திப்பூ’, ‘பாக்கு வெத்தலை’ உள்ளிட்ட சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றினார். .எம்.சவுந்தரராஜனுக்கு பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பொருத்தமாக குரல் அமையவில்லை என்ற குறை இருந்து வந்தது. அதை தனது வசிய குரலால் போக்கினார் மலேசியா. அவருக்கு இவர் முதல் மரியாதை படத்தில் பாடிய அனைத்து பாடல்களும் இப்போது கேட்டாலும், மயிலிறகால் மனதை வருடியது போல இதமாக இருக்கும். ‘பூங்காற்று திரும்புமா’, ‘எய் குருவி... சிட்டுக்குருவி’, ‘வெட்டிவேரு வாசம்’ போன்ற பாடல்கள் ஒலிக்காத இடமே எனலாம். அந்தளவுக்கு இவரது குரல் பட்டித்தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது.

‘நீ சிரித்தால் தீபாவளி’ என்ற படத்தையும் இயக்கி தயாரித்தார். தொடர்ந்து பாடி வந்தாலும் பக்கவாதத்தால் உடல்நலம் பாதித்தது. இதையடுத்து சென்னையில் 2011, பிப்.20ம் தேதி உயிரிழந்தார். இன்று எத்தனையோ பாடகர்கள் பாடினாலும், அவரது  மென்மை தவழும் கம்பீரக்குரலுக்கு ஈடாகாது என்றுதான் சொல்ல வேண்டும். அவர் காலமானாலும், அவரது காந்தக்குரல் காலத்தால் என்றுமே அழியாது.

Tags : Malaysia Vasudevan Memorial Day ,park , 'Get back , park ,like my song': Vasudevan,Memorial Day
× RELATED தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்