தமிழ்நாட்டில் காவலர் தேர்வுக்கான நடைமுறைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் காவலர் தேர்வுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 2ம் நிலை காவலர், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான நடைமுறைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். 5ம் தேதி வரை எந்தவித முடிவும் எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர், டி.ஜி.பி., உள்துறை செயலாளர் பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4, குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலமாகி அது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் பாதிக்கப்பட்ட 15 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில் தமிழ்நாட்டில் காவலர் தேர்வுக்கான விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை.

எனவே கிட்டத்தட்ட 8 ஆயிரத்து 888 பணியிடங்கள் அதாவது, 2ம் நிலை காவலர், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கவேண்டும். மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒவ்வொரு அரசு துறை தேர்வுகளிலும் இதுபோன்ற முறைகேடு நடப்பது கேலி கூத்தாக உள்ளது என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தொடர்ந்து, முறைகேடு நடப்பதால் அரசு பணி தேர்வு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் கருத்து தெரிவித்து, தற்போது அந்த நடைமுறைக்கே தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர், டி.ஜி.பி., உள்துறை செயலாளர் பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் காவலர் தேர்வுக்கான நடைமுறைகள் அனைத்துமே உடனடியாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு 2 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: