×

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஏராளமான சிறுபான்மையின மக்கள் நாடற்று போகும் நிலை ஏற்படும்: ஐ.நா பொதுச்செயலாளர் கவலை

இஸ்லாமாபாத்: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஏராளமான சிறுபான்மையின மக்கள் நாடற்று போகும் நிலை ஏற்படும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார். புதிதாக சட்டம் இயற்றும்போதோ அல்லது, சட்டத்தில் திருத்தம் செய்யும்போதோ மனிதாபிமானத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றார். இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பாகிஸ்தான் எம்.பி.க்களை கடந்த 17ம் தேதியன்று அன்டோனியோ குடரெஸ் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி, இந்தியா உடனான கா‌‌ஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். அவரிடம் பாகிஸ்தான் எம்.பி.க்கள், தற்போது போர் பதற்றம் நிலவுகிற சூழ்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு பேச்சுவார்த்தையை மறுபடியும் தொடங்க முடியாது; இந்த பதற்றமான சூழ்நிலையில் ஐ.நா. சபை தலைமையின் பங்களிப்பு மிக முக்கியமானது என வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு காண்பதற்கு ஐ.நா சபை நடுவரின் பங்கை வகிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கா‌‌ஷ்மீர் பிரச்சினையில், மூன்றாவது தரப்பினரின் தலையீட்டுக்கு இடமே இல்லை, இது பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்வுகாண வேண்டிய ஒன்று என்பது இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Minorities ,UN ,Secretary-General ,Antonio Guterres ,Muslims , Citizenship Amendment Act, Minority People, UN, Chief Antonio Guterres
× RELATED அனைத்திலும் சந்தேகத்துக்குரிய...