கொரோனா வைரஸ் பாதிப்பு..: ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இரண்டு பயணிகள் உயிரிழப்பு

டோக்கியோ: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இரண்டு பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் நோக்கி வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்த சிலருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால், 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என 3,711 பேருடன் அந்த கப்பல் ஜப்பானின்  யோகோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டனர். பின்னர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதே சமயம், 14 நாள் கண்காணிப்புக்குப் பிறகு வைரஸ் தொற்று இல்லாதவர்கள் கப்பலில் இருந்து வெளியேற நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதற்கட்டமாக 500 பயணிகள் கப்பலில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் ஒருவர் 87 வயது முதியவர் என்றும், மற்றொருவர் 84 வயது பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இருவரும் பிப்ரவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சிகிச்சைக்காக கப்பலில் இருந்து இறக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், உயிரிழந்த இருவரும் ஜப்பானியர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவை சேர்ந்த 300 பயணிகள் மட்டும் கப்பலில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: