×

கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு எதிரொலி : ரூ.32,000ஐ நெருங்குகிறது தங்கம் விலை; 3 நாட்களில் சவரன் 634 உயர்ந்து ரூ.31,840க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.3,980-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் உயர்ந்து ரூ.52.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு தீவிரம் அடையும் என்ற எச்சரிக்கையால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதே இதற்கு காரணம். ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன.

ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.  இதன் எதிரொலியாக சென்னையில் கடந்த 13ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000ஐ தாண்டி, 31,112க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி சவரன் 31,392ஐ தொட்டது. 17ம் தேதி சற்று குறைந்தது.

ஆனால், மீண்டும் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.3,926க்கும், சவரனுக்கு 192 உயர்ந்து 31,408க்கும் விற்கப்பட்டது.தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.3,965க்கும், சவரனுக்கு ரூ.312 அதிகரித்தது. சவரன் 31,720 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் விலையில் புதிய உச்சமாக கருதப்படுகிறது. தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு 634 அதிகரித்துள்ளது.தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Gold, Price, Jewelry, Shaving, Silver, Sales, Gr
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 மக்களவை...