விவசாயிகளின் நெடுநாள் கனவு நிறைவேறுமா ?.. பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கலாகிறது

சென்னை : பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கலாகிறது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் மசோதாவை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்

விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தல்

தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரொ கார்பன், மீத்தேன் உள்ளிட்டவை எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு இந்த பகுதி தரிசு நிலமாக மாறும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலை மாற டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு நல்ல செய்தி வரும் : முதல்வர்

இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று உறுதி அளித்தார். சட்டப்பேரவையில் நேற்று பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதாவை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்கு திமுக ஆதரவு தரும் என்றும் கூறினார். அப்போது விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

இதைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்கவும் அதில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் இது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்து சட்டமாகுமா ?

இந்நிலையில் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதாவிற்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தாலும் இந்த சட்டத்திற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்து சட்டமாகுமா என கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் உறுதியான முடிவெடுத்து டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் என்று அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

Related Stories: