சென்னை பல்கலைக் கழகத்துடன் இந்தோனேசியா விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: இந்தோனேசியாவின் ஏக் மாகாண கவர்னர் சென்னை பல்கலைக்கழகம் வந்த நிலையில், விரைவில் சியா கோலா பல்கலைக்கழகத்துடன் சென்னை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்தோனேசியாவின் ஏக் மாகாண கவர்னர், சியா கோலா பல்கலைக்கழக நிர்வாகிகள் உள்பட 25 அதிகாரிகள் குழுவினர் சென்னை பல்கலைக்கழகம்  வந்தனர். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி, கவர்னர் மற்றும் அதிகாரிகள் குழுவினரை வரவேற்றார்.

இந்தோனேசிய அதிகாரிகள் குழுவினருடனான பேச்சுவார்த்தை மூலம் மாணவர் பரிமாற்றம், ஆசிரியர் பரிமாற்றம், ஆராய்ச்சியில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்தோனேசியாவின் சியா கோலா  பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் இடையேயான ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்பு அளித்தப்பதற்கான கடிதத்தில் கையெழுத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவதற்கான அதிகாரியை நியமிக்க இரு  பல்கலைக்கழக நிர்வாகங்களும் முடிவு செய்துள்ளன.  அதைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் ஹவுஸ், நூலகம், சேப்பாக்கம் வளாகத்தை கவர்னர், அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். இதன்மூலம் இந்தோனேசிய  பல்கலைக்கழகங்கள் சென்னை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்பாக இது அமையும். இவ்வாறு சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: