×

கோயில், சர்ச், மசூதிகளின் வெளியே பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  கோயில்களுக்கு வெளியே பிளாஸ்டிக் பைகளில் வைத்து பூஜைப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிளாஸ்டிக் பயன்படுத்த தடை கடந்த 2019 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன்,  பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும்  வகையில் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில்  அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வெளியே பூஜைப் பொருட்கள், பூக்களை விற்பவர்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகிறார்கள். அதை தடுக்க அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்.வழிபாட்டு தலங்களில் பூஜை பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை கண்டிப்பாக அறிவுறுத்த வேண்டும். கடற்கரையில் நடத்தப்படும் சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக்  குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : Tamil Nadu ,High Court ,government ,mosques ,churches ,temples ,The Temple , Outside ,temple, ,plastic bags, Tamil Nadu government ,stop selling
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...