சொத்துவரியை உயர்த்துவது குறித்து 30 நாளில் ஆய்வறிக்கையை அரசுக்கு தர வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சொத்து வரியை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள குழு 30 நாட்களில் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் சொத்துவரி விதிக்க விதிகளை வகுக்கக்கோரி வக்கீல் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2018ம் ஆண்டு உயர்த்தப்பட்ட சொத்துவரியை நிறுத்தி வைத்தது ஏன் என்பன  உள்ளிட்ட கேள்விகளுக்கு நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோருக்கு  உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணைசெயலாளர் நேரில் ஆஜராகி நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து விளக்க மனு தாக்கல் செய்தனர்.

அப்போது, மாநகராட்சி ஆணையர், சென்னையில் கூவம் அடையாறு மற்றும் பங்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கழிவுநீர் சுத்திகரிப்பது நிலையங்கள் அமைப்பது தொடர்பாக  சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை மூலம் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் நீதிபதிகளிடம்,  கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பை அப்புறப்படுத்துவது  தொடர்பாக ₹400 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டத்திற்கு, 30 நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், குப்பை அப்புறப்படுத்துவது தொடர்பாக இரண்டாவது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ₹1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, மத்திய வீட்டு வசதி துறை செயலாளர் விளக்கமளிக்க வேண்டும். மாநகராட்சி சொத்துவரியை உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு 30 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கை மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று   உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: