×

24ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜெயலலிதா பிறந்த நாள், பட்ஜெட் பொதுக்கூட்டம்: இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கையை விளக்க வருகிற 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று அதிமுக கட்சியினருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை விளக்கி  வருகிற 24ம் தேதி (திங்கள்) முதல் 28ம் தேதி (வெள்ளி) வரை அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள  பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் மற்றும் அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை  தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24ம் தேதி அன்று ஆங்காங்கே ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அல்லது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர். அதன்படி, வருகிற 24ம் தேதி சென்னை, ஆர்.ேக.நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேசுகிறார்கள்.

Tags : Budget Public Meeting ,OPS Announcement ,Budget Meeting ,Birthday ,Jayalalithaa , Jayalalithaa's Birthday, Budget, Meeting, EPS, OPS
× RELATED மன்னார் வளைகுடா, பால்க் ஜலசந்தியை...