கையெழுத்து இயக்க படிவங்களை எம்பிக்கள் வழங்கினர் குடியுரிமை திருத்த சட்டத்தால் கடுமையான வெறுப்புணர்வு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது: மத்திய அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தால் கடுமையான வெறுப்புணர்வு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்கும்படி மு.க.ஸ்டாலின் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அப்போது 2 கோடி பேர்  கையெழுத்திட்ட மனு அவரிடம் அளிக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது பெறப்பட்ட படிவங்களை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி எம்பிக்கள் நேற்று  டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வழங்கினர். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு எழுதிய கடிதத்தையும் அவரிடத்தில் அளித்தனர். ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில்  கூறியிருப்பதாவது: சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக, இந்தியாவின் அடையாளத்தை காப்பாற்றுவதற்காக இன்றைக்கு மக்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள்.  நாட்டைப் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டம்-2019, தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ஆண்கள், பெண்கள், ஏன் குழந்தைகள் ஆகியோரின்  காட்டூத் தீ போன்ற தீவிரப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசியல் சட்ட முகவுரையில் கூறப்பட்டுள்ள மதசார்பின்மை மற்றும்  அடிப்படை அம்சங்களுக்கு எதிரானது. இதனால் ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாநில  சட்டமன்றங்களில் இந்த குடியுரிமை சட்ட திருத்தம்-2019, என்.பி.ஆர், என்.சி.ஆர் ஆகியவற்றை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதற்கு முன்பு எப்போதும் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலை நாட்டில் நிலவி, இந்த மூன்றின் மீதும்  கடுமையான வெறுப்புணர்வு மக்கள் மனதில் ஏற்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.   இது ‘சமத்துவம்’ என்ற நம் அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பிரிவை வெளிப்படையாக மீறியிருக்கிறது. இது அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை  நாடற்றவர்களாக்கி, அவர்களின் வாழ்வுரிமை மற்றும் தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் ஆபத்து மிகுந்தது. தங்களின் எதிர்காலம், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று எண்ணற்றோர் தூக்கமில்லாத இரவுகளை கழித்துக்  கொண்டிருக்கிறார்கள். ஆகவே தேச நலன், மக்கள் நலன் கருதியும், இந்தியர்கள் அனைவருக்கும் அமைதியான வாழ்வினை அளிக்கவும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.சி.ஆர் ஆகியவை உடனடியாக ரத்து செய்யப்பட  வேண்டும்.மத்திய அரசு, மாநில அரசுகளின் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முயற்சிகள் நடக்கும் நேரங்களில் எல்லாம் மாநில உரிமைகளை பாதுகாக்க திமுக காலம் காலமாக முன்னணியில் நின்று போராடி, கூட்டாட்சி தத்துவத்தை  பாதுகாத்து வருகிறது.  ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கூட்டாட்சி தத்துவம் மிக மோசமான அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது. ஆகவே நாட்டின் தலைவராக இருக்கும் குடியரசுத் தலைவரின் கீழ் மத்திய அரசு  செயல்படுவதால், இந்த தருணத்தில் குடியரசுத் தலைவர் அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்கு நிச்சயம் தலையிடுவார் என்று திமுக நம்புகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் பயங்கரமான சட்டத்திற்கு எதிரான மக்களின் ஆதங்கத்தையும், ஆவேசத்தையும் பார்த்துக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைதியாக இருக்க இயலாது.  தேர்ந்தெடுக்கப்பட்ட  மக்களுக்கு எங்களது முதல் பொறுப்பை நாங்கள் துறக்க முடியாது. ஆகவே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, குறைகளை, கவலைகளை குடியரசுத் தலைவர்  வெளிப்படுத்த திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் கடந்த 2 முதல் 8ம்தேதி  வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த இயக்கம் மகத்தான வெற்றி பெற்று- இரண்டு கோடி பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். அந்த கையெழுத்துகள் அடங்கிய படிவங்களை இந்திய குடியரசுத் தலைவர் முன்பு சமர்ப்பிக்கிறோம். ‘குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, என்.பி.ஆர்,  என்.சி.ஆர்’ ஆகியவற்றை ரத்து செய்யுமாறு  மத்திய அமைச்சரவைக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்குவார் என்று நம்புகிறோம்.  இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள படிவங்களில் உள்ளது வெறும் கையெழுத்துக்கள் அல்ல, மாறாக  மதசார்பின்மை, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் அடையாளங்களை பாதுகாக்க எப்போதும் போராடிக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் விருப்பமும் உணர்வுகளும் இந்த கையெழுத்துக்களில்  எதிரொலிக்கின்றன. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.மத்திய அரசு, மாநில அரசுகளின் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முயற்சிகள் நடக்கும் நேரங்களில் திமுக காலம் காலமாக முன்னணியில் நின்று போராடி, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாத்து  வருகிறது.

Related Stories:

>