போக்குவரத்து துறையில் முறைகேடு செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில், கடந்த 2011-15ம் ஆண்டில் தமிழக போக்குவரத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் பல்வேறு வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், பலர்  பணம் கொடுத்து வேலையில் சேர்ந்ததாகவும், பலரிடம் பணம் வாங்கி கொண்டு வேலை கொடுக்காமல் மோசடி செய்ததாகவும் செந்தில் பாலாஜி மீது பரபரப்பு புகார்கள் எழுந்தன. இந்தநிலையில், 16 பேரிடம் ₹95 லட்சம் பணம் வாங்கி கொண்டு  வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனைதொடர்ந்து, வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாக பலர் புகார் வர தொடங்கின. இந்த புகார்களின்  அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதில் அவர் 238 பேருக்கு மேல், ₹2 கோடியே 80 லட்சம் வரை பணம் பெற்று வேலை வாங்கி தராமல் மோசடியில்  ஈடுபட்டு இருப்பதாக தெரியவந்தது. இதனைதொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான  மந்தைவெளி வீடு, கரூரில் உள்ள பூர்வீக வீடுகள் மற்றும் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் வீடு மற்றும் அவரது டெக்ஸ்டைல்  நிறுவனம் என 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மந்தைவெளி வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில், தன்னை கைது செய்துவிடக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் பெற்றார். மேலும், சோதனையில் பல்வேறு முக்கிய, புதிய ஆவணங்கள் போலீசாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. அதனை வைத்து போலீசார் போக்குவரத்துறை முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு புதிய வழக்கை தொடர்ந்து இருப்பதாக  கூறப்படுகிறது. இந்தநிலையில் செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினர் என்பதால், ஏற்கனவே  எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு முடிந்து, சாட்சி விசாரணைகள் நடந்து வரும் வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில்  அமைந்துள்ள எம்.பி, எம்.எல்.ஏகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வழக்கில் செந்தில் பாலாஜியை இன்று நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>