பினாமி தொடர்ந்த வழக்கு சசிகலாவுடன் 168 கோடிக்கு ஒப்பந்தம் நடந்துள்ளது என ஐடி மனுவில் தகவல்: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: புதுச்சேரியில் லட்சுமி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வந்த நவீன் பாலாஜி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து 2000ம் ஆண்டு அன்னிய செலாவணி மற்றும் ரிசார்ட், ேஹாட்டல் தொழிலை துவங்கினார்.  ரிசார்ட் தொழில் லாபம் ஈட்டாததால், 2016ம் ஆண்டு அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.அப்போது, சசிகலாவின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டு சிலர் தன்னை அணுகி, இந்த சொத்துக்களுக்கு 168 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக, 148 கோடி ரூபாய் அளவுக்கு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம்  ரூபாய் நோட்டுக்களை சசிகலாவின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டவர்கள் கொடுத்துள்ளனர். பின், இந்த பரிவர்த்தனை திடீரென ரத்து செய்யப்பட்டது.இந்த பின்னணியில், நவீன் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 148 கோடி ரூபாய் பணத்தை சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக்கூறி முடக்கி  உத்தரவிட்டனர்.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நவீன் பாலாஜி உள்பட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், ரிசார்ட்டுக்கான கிரையத் தொகையை, மதிப்பு இழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பெறும்படி, சசிகலாவின் பிரதிநிதிகள் தன்னை நிர்பந்தித்ததாகவும், கடைசியில் இந்த பரிவர்த்தனையை ரத்து  செய்வதாக தெரிவித்ததாகவும், பணத்தை திருப்பிக் கொடுக்க இருந்த நிலையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து முடக்கி விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வருமான வரித்துறை பதில் தருமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் வருமான வரித்துறை துணை ஆணையர்  திலீப் (பினாமி பரிவர்த்தனை தடுப்பு) பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், அவரது மொபைல் போனில் பல தகவல்கள் கிடைத்தன. மேலும், பல பினாமி பரிவர்த்தனை தகவல்கள் அடங்கிய  தாள்களும் கிடைத்தன.விவேக் ஜெயராமன் வீட்டில் நடந்த சோதனையிலும் பினாமி பரிவர்த்தனை செய்ததற்கான ஆவணங்களை வருமானவரித்துறை அகதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சசிகலா மற்றும் மனுதாரர் நவீன் பாலாஜியின் நிறுவனத்துக்கும் இடையே  நடந்த ஒப்பந்தத்தில் ரிசார்ட், 1250 கிலோவாட் காற்றாலை ஆகியவை தொடர்பான பரிவர்த்தனை குறித்த தகவல்கள் இருந்தன.

நவீன்பாலாஜி, நாகராஜன், சுகன்யா, மஞ்சுளா ஆகிய பங்குதாரர்களுக்கும் சசிகலாவுக்கும் இடையே ₹168 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சசிகலாவின் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில்  கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக நவீன் பாலாஜி மற்றும் சசிகலாவின் வக்கீல் செந்தில் ஆகியோர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். ஒப்புதல் வாக்குமூலம்தான் முக்கியமான சாட்சி என்பதால் இதில் குறுக்கு விசாரணை அவசியமில்லை. மனுதாரர் தான்  சசிகலாவின் பினாமி இல்லை என்று நிரூபிக்க அவருக்கு பல முறை வருமான வரித்துறை வாய்ப்பு தந்தது. ஆனால், மனுதாரர் நவீன் பாலாஜி தான் சசிகலாவின் பினாமி இல்லை என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் தாக்கல்  செய்யவில்லை. ஆனால், இந்த வழக்கை திசைதிருப்ப பார்க்கிறார்.பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் பினாமி சொத்துக்களாகவே கருதப்படும். எனவே, இந்த வழக்கில் மனுதாரர் சசிகலாவின் பினாமிதான் என்பதை உறுதி செய்ய போதுமான ஆவணங்கள்  வருமானவரித்துறையிடம் உள்ளன. எனவே, தனது சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க கோரி நவீன்பாலாஜி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: