×

அமைச்சர் பாண்டியராஜன் மீதான உரிமை மீறல் புகார் உரிமை குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் மறுப்பு: அவையிலிருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: அமைச்சர் பாண்டியராஜன் மீதான உரிமை மீறல் புகார் குறித்து, அவை உரிமை குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  தமிழக சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, தங்கம் தென்னரசு பேசியதாவது: நான் கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பதிலிலும் உரிமை மீறல் உள்ளது. திரும்ப திரும்ப குடியுரிமை சம்பந்தமாக அவர் கூறிய விளக்கத்திலும் உரிமை மீறல் இருக்க முகாந்திரம்  இருப்பதாக கருதுகிறேன்.  சபாநாயகர் தனபால்: நீங்கள் கொண்டு வந்த உரிமை மீறல் குறித்து அமைச்சர் விளக்கம் தெரிவித்தார். அதற்கு பிறகு நான் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டேன். எனவே, அதன் மீது மீண்டும் பேச முடியாது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: தாங்கள் அளித்த தீர்ப்பில் தலையிடவில்லை. முதலில் அமைச்சர் பேசும்போது, என்ன கருத்துக்காக உரிமை மீறல் இருக்கிறது என்று சொன்னோமோ, அதே கருத்தைத் தான் திரும்பவும் அவர்  அளித்த பதிலிலும் சொல்லியிருக்கிறார். அந்த காரணத்தினால், அது மீண்டும் உரிமை மீறலாகிறது.(அவரை தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது)

 சபாநாயகர்: அவையில் முறைப்படி விவாதித்து தீர்ப்பு வழங்கி விட்டேன். இதுபற்றி மீண்டும் பேசுவது முறையல்ல. எனது தீர்ப்பின் மீது எந்த பிரச்னையும் எழுப்ப முடியாது.
 துரைமுருகன்: அமைச்சர் பேசிய பதிலில் உரிமை மீறல் உள்ளது. அதை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புங்கள். விசாரிக்கட்டும்.
 சபாநாயகர்: தீர்ப்பு சொன்ன பிறகு, அதை மாற்றுவதற்கில்லை. மீண்டும் அதன் மீது பிரச்னை எழுப்ப முடியாது.
 துரைமுருகன்: இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.  இதையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

Tags : Speaker ,walk-out ,walkout ,DMK , Complaint , Pandiyarajan,rights committee , DMK walkout
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...