×

52,000 கோடி மதிப்பீட்டில் 2ம் கட்ட தூய்மை இந்தியா திட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.52,000 கோடி மதிப்பீட்டில் 2ம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு கிராமப்புறங்களில் 2ம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இத்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 10 கோடிக்கும் அதிகமான தனிநபர் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதன் மூலம், அனைத்து மாநிலங்களிலும் கிராமப்புற பகுதிகள் திறந்தவெளி மலம் கழிக்காத கிராமங்களாக தரம் உயர்ந்துள்ளன.

அனைவரும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் 5 ஆண்டு திட்டம், 2ம் கட்டமாக அடுத்த நிதியாண்டு முதல் 2024-25ம் ஆண்டு வரை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, ரூ.52,497 கோடி நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. புதிதாக கட்டப்படும் வீடுகளில் கழிப்பறை கட்ட ஊக்கத்தொகை வழங்குவதற்கான தொகை ரூ.12,000 கோடியாக இருக்கும். இத்துடன் 15-வது நிதிக்குழு முன்மொழிந்துள்ள ரூ.30,375 கோடி ஒதுக்கீட்டிலான ஊரக குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவுத் திட்டம் வரும் நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமலாக்கப்படும்.

இதேபோல், 22வது சட்ட ஆணையத்தை அமைப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களில் சீர்திருத்தம் செய்வது அல்லது புதிய சட்டங்களை இயற்றுவது குறித்து சட்ட ஆணையம் ஆய்வுகளை மேற்கொள்ளும். மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, பொது சிவில் சட்டம் போன்ற முக்கிய சட்டங்கள் 22வது சட்ட ஆணையத்திற்காக காத்திருக்கிறது.

Tags : Cabinet ,India , 52,000-crore clean-up, India project, Cabinet approval
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...