நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் மாணவி கழுத்தில் மாணவன் தாலி கட்டுவது போல் நடிக்கும் வீடியோ : சமூக வலைதளங்களில் வைரல்

களக்காடு: மாணவி கழுத்தில் மாணவன் தாலி கட்டுவது போல் நடித்து, செயின் அணிவிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செல்போன்களும் சமூக வலைதளங்களும். இவற்றால் எத்தனையோ பயன்கள் இருந்தாலும், அவைகளால் ஏற்படும் கலாச்சார சீரழிவுகளுக்கும் பஞ்சமில்லை. செல்போன்களின் பயன்பாடு அதிகரித்ததால் மாணவ-மாணவிகள் பள்ளி பருவத்திலேயே காதல் என்ற நெருப்பில் விழுந்து விட்டில் பூச்சிகளாய் தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். பள்ளியில் எவ்வளவோ கட்டுப்பாடுகளை விதித்தாலும், எல்லை தாண்டும் மாணவர்களின் முடிவு துயரமானதாகவே அமைகிறது. கல்வி பயிலும் வயதில் மாணவிகள் தாயாகும் அவலமும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியிலும் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகள் கலங்க வைப்பதாகவே உள்ளது.

களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஒரு மாணவன், பள்ளி சீருடையில் உள்ள மாணவி கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து செயினை அணிவிக்கிறார். அந்த மாணவியும் வெட்கத்தில் தலை குனிந்தபடி செயினை தாலி போல் ஏற்றுக் கொள்கிறார். 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர வைக்கிறது. அந்த காட்சிகளுக்கு பின்னணியில் ஒரு திரைப்பட பாடலும் ஒலிக்கிறது. இதைவைத்து பார்க்கும் போது சம்பந்தப்பட்ட மாணவனோ அல்லது மாணவியோ வீடியோவை எடிட் செய்து வெளியிட்டார்களா? அல்லது அவர்களின் நண்பர்கள் பரவ விட்டார்களா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.  அந்த வீடியோவில் இந்த ஜோடிகளுக்கு பின் வேறு சில மாணவ-மாணவிகளும் தெரிகின்றனர்.

இந்த வீடியோ களக்காட்டில் உள்ள ஒரு கோயிலின் வெளி பிரகாரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. காதலர் தினமான கடந்த 14ம் தேதி இந்த காட்சிகள் அரங்கேறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த காட்சி, எப்போது, எப்படி, யாரால் எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் உறுதியாக தெரியவில்லை. அதில் இடம்பெற்றுள்ள மாணவ-மாணவிகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர். எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவில்லை. திருமண பந்தத்தில் ஆணையும், பெண்ணையும் இணைப்பது தாலி. புனித தன்மை வாய்ந்த தாலியை மாணவர்கள், மாணவிகளுக்கு கட்டுவது போல் விளையாட்டாக நடித்தாலும் இது கலாச்சார சீரழிவின் உச்சமே என்கின்றனர் பொதுமக்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நவீன செல்போன்களின் தாக்கம் மாணவ-மாணவிகளை பாடாய்படுத்தி வருகிறது. 3 வயது முதல் சிறுவர், சிறுமிகள் செல்போனில் மூழ்கி விடுவதை காண முடிகிறது. பெற்றோர் தங்களது குழந்தைகளை வளர்க்கும் போது அவர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் விதம், பள்ளி பருவத்தில் அவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வளர்க்க வேண்டும். விளையாட்டாக செய்யும் நிகழ்வுகள் கூட எதிர்காலத்தில் அவர்களது நல் வாழ்க்கைக்கு ஊறு விளைவித்து விடும் என்பதை மாணவிகளும் அவசியம் உணர வேண்டும்” என்றனர்.

காலாவதியான நீதி போதனை

முன் காலத்தில் பள்ளியில் நீதிபோதனை என்ற பாடம் உண்டு. அதற்கென தனி ஆசிரியரே இருப்பார். அவர் மாணவர்களுக்கு நீதி கதைகளை கூறி நல்ல அறிவுரைகளையும், வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்குவார். ஆனால் தற்போது அத்தகைய பாடங்கள் இல்லாததும் இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories: