போலி ஆவணம் மூலம் ஆதார் பெற்ற புகார் குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு உத்தரவு : ஆதார் நிறுவனம் அதிரடி

திருமலை: ஐதராபாத்தில் போலி ஆவணம் பயன்படுத்தி ஆதார் கார்டு பெற்ற புகார் எதிரொலியாக 127 பேர் தங்களது குடியுரிமையை நிரூபிக்க உரிய சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆதார் நிறுவனம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த சத்தர் கான் என்ற ஆட்டோ டிரைவர்  போலி சான்றிதழ்களுடன் ஆதார் அட்டை பெற்றதாக புகார் வந்தது. இதையடுத்து ஆதார் ஆணையம் பிப்ரவரி 3ம் தேதி சத்தர் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.  அதில், இந்திய குடிமகனுக்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,  இந்தியர் இல்லையென்றால், இந்தியாவில் சட்டப்பூர்வமாக வந்ததை  நிரூபிக்க வேண்டும்.  இல்லையெனில் தங்களின் ஆதார் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆதார் நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ் ஊடகங்களுக்கு பகிர்ந்து கொண்டதால் தற்போது இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து ஆதார் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தவறான ஆவணங்களுடன் ஆதார் அட்டைகளை பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஐதராபாத்தில் உள்ள 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் வழங்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆதார் சட்டத்தின் கீழ், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கு முன் இந்தியாவில் 182 நாட்கள் தங்கி இருக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: