டெல்லி கண்காட்சிக்கு திடீர் விசிட் சொந்தமாக பணம் கொடுத்து சோக்கா, டீ சாப்பிட்ட மோடி : மக்கள் இன்ப அதிர்ச்சி

புதுடெல்லி:  டெல்லியில் நடந்து வரும் கண்காட்சிக்கு சென்ற பிரதமர் மோடி 120 கொடுத்து லிட்டி சோக்காவை வாங்கி விரும்பி சாப்பிட்டார். டெல்லியில் நடக்கும் ‘ஹூனார் ஹாத்’ எனப்படும் சிறுபான்மையின சமூகங்களை சேர்ந்த கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, திடீரென ராஜ்பாத்தில் நடந்து வரும் இந்த கண்காட்சிக்கு சென்றார். அங்கு இருந்தவர்களுக்கு இது இன்ப அதிர்–்ச்சியை அளித்தது. கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளை பிரதமர் ஆர்வத்துடன் பார்வையிட்டார். அங்கு அவர் 50 நிமிடங்களை கழித்தார்.  

பின்னர், அங்குள்ள கடையில்  கோதுமை மாவு உருண்டையில், வறுத்த கொண்டை கடலை மசாலா வைத்து தயாரிக்கப்பட்ட உப்பு ேகாதுமை கேக் எனப்படும் லிட்டி சோக்காவை வாங்கிய மோடி அதை விரும்பி சாப்பிட்டார். இந்த லிட்டி சோக்கா, பீகார், கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டில் பிரபலமான உணவாகும். லிட்டி சோக்காவின் விலையான 120-ஐ கடை உரிமையாளரிடம் செலுத்தினார். பின்னர் அவர், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியுடன் சேர்ந்து டீ அருந்தினார். இது, குல்ஹாத் எனப்படும் களிமண் டம்ளர்களில் வழங்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி, அமைச்சர் அருந்திய டீக்கும் சேர்த்து 40 செலுத்தினார். பிரதமர் மோடி கண்காட்சிக்கு சென்றதால் அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர்.

Related Stories: