அமைச்சர் வேலுமணி மீதான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்ற அனுமதியில்லாமல் அரசுக்கு அனுப்பியது ஏன்? : லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது உறவினர்களுக்கு வழங்கியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர்

உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா  ஆகியோர் அடங்கிய  அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி அளித்த  ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை, ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை ஆணையர் மூலம் தமிழக அரசுக்கு கிடைத்தது. அந்த அறிக்கையை ஆய்வு செய்ததில் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் விசாரணையை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது என்றார்.

அப்போது, அறப்போர் இயக்கம் சார்பில் தரப்பில் ஆஜரான  வக்கீல் சுரேஷ், இந்த வழக்கில் சாட்சியாக இருந்த சந்திரபோஸ் என்ற ஒப்பந்ததாரரை வீட்டை காலி செய்ய சொல்லி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அமைச்சர் வேலுமணி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதோடு, விசாரணை அதிகாரி அமைச்சரின் முகவர் போல செயல்படுகிறார். சாட்சியை மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், நீதிமன்றம் நியமித்த அதிகாரியே விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த அதிகாரி அமைச்சரின் முகவர் போல செயல்படுகிறார் என கூறுவது கண்டனத்துக்குரியது என்றார். அமைச்சர் எஸ்.பி வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல் சுந்தரேஷ், ‘டெண்டர் ஒதுக்கீடு செய்வதில் அமைச்சருக்கு எந்த பங்கும் இல்லை’ என்று வாதிட்டார்.

மாநகராட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் வாதிடும்போது, நீதிமன்றத்தில் அரசியல் போர் நடத்துகிறார்கள். அரசியல் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு பொது நல வழக்கே அல்ல என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்ற அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன்’ என்று லஞ்ச ஒழிப்பு துறையிடம் கேள்வி எழுப்பினர். எனவே, இந்த வழக்கை கைவிடுவது தொடர்பாக அரசு முடிவெடுத்ததற்கான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சாட்சியான ஒப்பந்ததாரரை மிரட்டியது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்பு துறையும், சென்னை போலீஸ் கமிஷனரும் பதில் தர வேண்டும் என்று  உத்தரவிட்டு விசாரணையை மார்ச் மாதம் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: