×

கொரோனா வைரசால் உற்பத்தி பாதிப்பு: மொபைல், டிவி, ஏசி விலை உயரும்: தள்ளுபடி சலுகைகளை குறைக்கும் நிறுவனங்கள்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் இந்த மாத இறுதியில் டிவி, மொபைல் போன், ஏசி விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நஷ்டத்தை தவிர்க்க, நிறுவனங்கள் தள்ளுபடி சலுகைகளை குறைக்க தொடங்கி விட்டன.  கொரோனா வைரசால் சீனாவில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டிவி, மொபைல் போன், ஏசி மற்றும் பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் ஆகிவற்றுக்கு சீனாவையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால், மேற்கண்ட வீட்டு உபயோக பொருட்களின் விலை இந்த மாத இறுதியில் உயர வாய்ப்பு உள்ளதாக, தொழில்துறையினர் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:  மொபைல் போன் உற்பத்தியில் சீன ஆதிக்கம்தான் அதிகம். இந்தியாவிலும், மொபைல் போன் உற்பத்திக்கு தேவையான 85 சதவீத உதிரி பாகங்கள் சீனாவில் இருந்துதான் இறக்குதியாகின்றன. இதுபோல் டிவி தயாரிக்க தேவையான 75 சதவீத உதிரி பாகங்கள் சீனாவில் இருந்துதான் வருகின்றன.

 தவிர, பெரிய டிவிக்கள், சமையலறைக்கு தேவையான பொருட்கள், மைக்ரோவேவ் உட்பட பல சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிறது. தற்போது சீனாவில் உற்பத்தி முடங்கியதால் உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கும் மொபைல் உற்பத்தி பாதிக்கப்படும். சில நிறுவனங்கள் தள்ளுபடி சலுகைகளை குறைத்துள்ளன. இதன் மூலம் விலை 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்கலாம். சர்வதேச சந்தையில் டிவி பேனல் விலை 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம். ஏற்கெனவே தட்டுப்பாட்டால் விலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் அதிகரித்து விட்டது. ஜப்பானை சேர்ந்த ஏசி நிறுவனம் தள்ளுபடி சலுகைகளை குறைத்து விட்டதால் ஏசி விலை 3 முதல் 5 சதவீதம் உயரும் என தெரிவித்துள்ளது. இதுபோல், சீனாவில் இருந்து உதிரிபாகங்கள் வருவது தாமதம் ஆவதால், விலை 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்த்துவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது என கோத்ரெஜ் நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.   

கொரோனா வைரசால் சீனாவில் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதுதவிர, ஏற்கெனவே புத்தாண்டு விடுமுறையில் தொழிற்சாலைகளின் மொத்த திறனில் 30 முதல் 60 சதவீதம் மட்டுமே உற்பத்தி நடந்துள்ளது. எனவே, பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  கப்பலில் பொருட்கள் வருவதால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, சில நிறுவனங்கள் விமானம் மூலம் உதிரிபாகங்கள், பொருட்களை வரவழைக்கின்றன. இதனால் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது என்றனர்.
இந்தியாவில் விற்பனையாகும் சீன மொபைல் உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை, சில நிறுவனங்கள் அடுத்த மாதத்துக்குள் நிலைமை சீராகலாம் என்கின்றனர். சில நிறுவனங்கள் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. சீனாவை சேர்ந்த ஒரு பிரபல மொபைல் நிறுவனம் தனது ஒரு சில மாடல்களின் விலையை 500 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

*  டிவி பேனல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. பேனல் விலை மேலும் 20 சதவீதம் உயரலாம் என தெரிகிறது.
* உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள நிலையில், சில நிறுவனங்கள் உதிரிபாகங்களை விமானம் மூலம் வரவழைக்க உள்ளன. இதனாலும் உற்பத்தி செலவு அதிகரித்து, விலை உயரும்.
* இந்த மாத இறுதிக்குள் விலை உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
* மொபைல் போன் உற்பத்திக்கு தேவையான 85% உதிரி பாகங்கள், டிவி தயாரிக்க தேவையான 75%  உதிரி பாகங்கள் சீனாவில் இருந்துதான் வருகின்றன.

Tags : Companies ,TV ,AC , Corona Virus, Mobile, TV, AC
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...