உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: தாய்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி

அடிலெய்டு: ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை  பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 81 ரன் வித்தியாசத்தில் தாய்லாந்து  அணியை வீழ்த்தியது. ஐசிசி  மகளிர் டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி  வருகின்றன. அடிலெய்டில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்  நியூசிலாந்து - தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து  பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து  சிறப்பாக விளையாடி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்  குவித்தது. அந்த அணியின் சூசி பேட்ஸ் 78, அமெலியா கேர் 54, மேடி கிரீன்  34,  கேப்டன் ரேச்சல் பிரீஸ்ட் 15, கேத்தி பெர்கின்ஸ் 8*ரன் எடுத்தனர்.

தாய்லாந்து பந்துவீச்சில் சானிதா சுத்திரங் 2, நாட்டயா பூச்சதம், ரத்னாபொர்ன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து  195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட தாய்லாந்து, 20ஓவர்  முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 113 ரன் மட்டுமே எடுத்து 81 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில்  அதிகபட்சமாக சானிதா 36, கேப்டன் சொர்னரின் டிப்போச் 21 ரன் எடுத்தனர்.  மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணியின் லீஷ் காஸ்பெரெக்,  ஹோலி ஹட்டில்ஸ்டன் தலா 3, அமெலியா கேர், மேடி கிரீன் தலா  ஒரு விக்கெட் வீழ்த்தினர். பிரிஸ்பேனில் இன்று நடைபெறும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் மோதுகின்றன.

Related Stories: