×

கொரோனா வைரஸ் பரவிய ஜப்பான் கப்பலில் இருந்து 500 பேர் வெளியேறினர்: சீனாவில் பலி எண்ணிக்கை 2,000

யோகோஹாமா: கொரோனா வைரஸ் பரவிய ஜப்பான் சொகுசு கப்பலில் 14 நாள் கண்காணிப்புக்குப் பிறகு, நோய் தொற்று இல்லாத 500 பயணிகள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 2,000த்தை தாண்டியது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 136 பேர் பலியாகினர். இதில் ஹூபெய் மாகாணத்தில் மட்டும் பலியானவர்கள் 132 பேர் ஆவர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 2,004 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 74,185 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11,000 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். ஆனாலும், புதிதாக வைரஸ் தொற்று ஏற்படுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 1,746 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, தென் கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட 15 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஹாங்காங்கில் 2வது நபர் கொரோனா வைரஸ் தாக்கி இறந்துள்ளார். இந்நிலையில், வைரஸ் பரவிய ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து நோய் தொற்று  இல்லாத பயணிகளை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கியது. ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் நோக்கி வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்த சிலருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால், 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என 3,711 பேருடன் அந்த கப்பல் ஜப்பானின்  யோகோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டனர்.

பின்னர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே சமயம், 14 நாள் கண்காணிப்புக்குப் பிறகு வைரஸ் தொற்று இல்லாதவர்கள் கப்பலில் இருந்து வெளியேற நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதற்கட்டமாக 500 பயணிகள் கப்பலில் இருந்து வெளியேறினர். கப்பலின் பால்கனியில் நின்றிருந்த மற்ற பயணிகளை பார்த்து உற்சாகமாக கை அசைத்தப்படி அவர்கள் தங்கள் உடைமைகளுடன் சந்தோஷம் பொங்க, டாக்ஸி, பஸ்களில் ஏறி வெளியேறினர். முன்னதாக, கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவை சேர்ந்த 300 பயணிகள் மட்டும் கப்பலில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியேறிய 500 பயணிகளில் பலர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு செல்ல தயாராகி உள்ளனர். அதே போல, உள்நாட்டை சேர்ந்தவர்கள் தத்தமது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து வெளியேறியவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினாலும், அங்கும் 14 நாள் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென சில நாடுகளும், மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்தி உள்ளனர். இதற்கிடையே, கப்பலில் நேற்று நடந்த பரிசோதனையில் மேலும் 79 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதிப்புள்ளோரின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானை போல, கம்போடியா துறைமுகத்தில் தனியாக நிறுத்தப்பட்டிருந்த வெஸ்டர்டாம் கப்பலில் இருந்தும் நோய் தொற்று இல்லாத பயணிகள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்து வெளியே வந்த முதல் பயணியை அந்நாட்டு பிரதமர் ஹன் சென் பூங்கொத்து கொடுத்து கட்டித் தழுவி வரவேற்றார். அந்த கப்பலில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளியேறி சொந்த நாடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

மேலும் ஒரு இந்தியருக்கு வைரஸ் அறிகுறி
ஜப்பான் சொகுசு கப்பலில் இருப்பவர்களில் 138 பேர் இந்தியர்களாவர். அவர்களில் 6 பேர் பயணிகள், 132 பேர் பணியாளர்கள். இவர்களில் 6 பேருக்கு வைரஸ் அறிகுறி இருப்பதால், அவர்கள் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மேலும் ஒரு இந்தியருக்கு வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெளியே வந்தவர்களால் அச்சம்
கப்பலில் இருந்து பயணிகளை விடுவித்த ஜப்பான் அரசின் முடிவை பல மருத்துவ நிபுணர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜப்பானின் கோபே பல்கலை பேராசிரியை கென்டாரோ இவாடா அளித்த பேட்டியில், ‘‘கப்பலில் 14 நாள் பயணிகளிடம் பரிசோதித்ததே மிகப்பெரிய தவறு. இந்த 14 நாள் கண்காணிப்பு சோதனை கப்பலுக்கு வெளியில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், தற்போது நோய் தொற்று இல்லை என பலரை வெளியே அனுப்பியதும் ஆபத்தை விளைவிக்க கூடும். அவர்களால் வெளியில் வந்து மேலும் 14 நாள் மருத்துவ பரிசோதனையில் இருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லாமல், மக்களோடு மக்களாக விமானம், ரயிலில் அவர்கள் பயணம் செய்வது ஆபத்தை நாமே தேடிக் கொள்வதற்கு சமம்’’ என்றார். இதே போல, டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த வெளிநாட்டவர்கள் யாரும் தங்கள் நாட்டிற்கு வரக்கூடாது என தென்கொரியா தடை விதித்துள்ளது.

‘ஆசியாவின் நோய்’சர்ச்சை தலையங்கம்
அமெரிக்காவை சேர்ந்த ‘வால்ட்ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகையில் ‘ஆசியாவின் நிஜமான நோய் சீனா’ என்ற தலைப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் தலையங்கம் வெளியிடப்பட்டது. இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள சீன அரசு, அமெரிக்க பத்திரிகை நிறவெறித் தன்மை கொண்டதாக நடந்து கொள்வதாகவும், குறிப்பிட்ட நாட்டை பாகுபடுத்திப் பார்ப்பதாகவும் குற்றம்சாட்டி, வால்ட்ஸ்டிரீட் ஜர்னலை சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் சீனாவில் இருந்து அடுத்த 5 நாட்களுக்குள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.

Tags : China ,Japan ,Corona , Corona virus, Japan ship, China, 2,000 killed
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...