வாலிபர் கொலையில் தாய்மாமன்கள் கைது

ஆவடி: ஆவடி கோவில்பதாகை, பூம்பொழில் நகர், பூங்கா தெருவை சேர்ந்தவர் புஜ்ஜி என்ற ராஜேஷ் (36). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் ராஜேஷ் வீட்டு அருகே உள்ள இறைச்சிக்கடை பகுதியில் சாலையோரத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

ஆவடி டேங்க்பேக்டரி இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது ராஜேஷை கொன்றது ஆவடி பாதுகாப்புத்துறை தொழிற்சாலையில் ஊழியர்களாக பணியாற்றி வரும் அவரது தாய் மாமன்களான வேலூர் அருகே காட்பாடி பகுதியை சேர்ந்த குணசேகரன் (56), கோயில்பதாகை, அசோக் நகரை சேர்ந்த முனியப்பன் (52) என தெரிந்தது. இதையடுத்து நேற்று காலை தனிப்படை போலீசார் இருவரையும் பிடித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஆட்டோ டிரைவர் ராஜேசுக்கு சவுந்தரியா என்ற மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ், ஆட்டோ ஓட்டாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.  இதனால் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

சமீபத்தில் ராஜேஷிடம் கோபித்துக்கொண்டு குழந்தைகளை விட்டுவிட்டு சொந்த ஊரான ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சவுந்தரியா சென்றுவிட்டார்.  இதன் பிறகு ராஜேஷ் 3 குழந்தைகளுடன் தாய் நாகராணி (61) வீட்டில் வசித்து வந்துள்ளார். மனைவி பிரிந்ததால் ராஜேஷ் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். மேலும் குடித்துவிட்டு வந்து தாய் நாகராணியிடம், ‘‘வீட்டை விற்று தனக்குரிய பங்கை தரும்படி கேட்டு துன்புறுத்தியுள்ளார்.  தகவலறிந்து அவரது தாய்மாமன் குணசேகரன் வீட்டுக்கு வந்து ராஜேஷை கண்டித்துள்ளார்.  பின்னர், அவர் சொத்தில் தனக்கும் பங்கு தர வேண்டும் என  கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் எதிர்ப்பு தெரிவித்து குணசேகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து குணசேகரன் தனது தம்பி முனியப்பனுடன் சேர்ந்து ராஜேஷை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து அவர்கள் நள்ளிரவு ராஜேஷின் சடலத்தை தூக்கி வந்து அருகில் உள்ள இறைச்சி கடை முன்பு போட்டு விட்டு சென்றுள்ளனர். இவ்வாறு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து  குணசேகரன், முனியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது  செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: