×

செல்போன் மூலம் மாணவிகளை ஆபாச படம் எடுத்த சென்னை ஐஐடி இணை பேராசிரியர் கைது: 3 மாதங்களாக நள்ளிரவில் ரசித்து வந்ததும் அம்பலம்

சென்னை: மாணவிகளின் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த சென்னை ஐஐடி ஏரோ ஸ்பேஸ் இணை பேராசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக ஆய்வகத்தில் உள்ள கழிவறையில் செல்போனில் படம் எடுத்து நள்ளிரவில் ரசித்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.சென்னை ஐஐடியில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஐஐடி வளாகத்திலேய நவீன வசதிகளுடன் தனித்தனி விடுதிகள் உள்ளன. அதேபோல் துறை ரீதியாக ஆய்வு கூடங்களும் அமைந்துள்ளன.இந்நிலையில் ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரோ ஸ்பேஸ் ஆய்வகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாணவி ஒருவர், இரவு 8.30 மணிக்கு ஆய்வகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறைக்கு சென்றதும் உடைகளை கழற்றிய போது, ஏதோ தவறு நடப்பது போல் உணர்ந்துள்ளார். சந்தேகமடைந்த அந்த மாணவி கழிவறையை சுற்றி பார்த்த போது, அருகில் உள்ள கழிவறையின் தண்ணீர் குழாய் துளைவழியாக செல்போன் மூலம் ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த மாணவி அலறியபடி உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
அதன்படி, ஆய்வகத்தில் இருந்த சக மாணவிகள் மற்றும் மாணவர்கள் ஓடி வந்து, அருகில் உள்ள கழிவறையில் இருந்த நபர் யார் என்று பார்த்த போது, ஏரோ ஸ்பேஸ் துறையின் இணை பேராசிரியர் சுபம் பானர்ஜி (25) செல்போனுடன் இருந்ததை கண்டு  அதிர்ச்சி அடைந்தனர். உடனே பாதிக்கப்பட்ட மாணவி, சுபம் பானர்ஜியின் செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அப்போது அவர் கழிவறைக்கு வந்து உடைகளை கழற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த மாணவி தனது காட்சிகளை செல்போனில் இருந்து அழித்தார். இதுபோல் உடன் படிக்கும் மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார்.

அப்போது சுபம் பானர்ஜி தனது செல்போனை வாங்கி அனைத்து வீடியோக்களையும் அழித்துவிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பலர் சுபம் பானர்ஜியை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.பின்னர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இரவு 11.30 மணிக்கு புகார் அளித்தார். அதன்படி கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கழிவறையில் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த இணை பேராசிரியர் சுபம் பானர்ஜியை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதைதொடர்ந்து போலீசார் ஐஐடி இணை பேராசிரியர் சுபம் பானர்ஜியை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவி
பல மாணவிகளின் வீடியோக்களை சுபம் பானர்ஜி அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை போலீசார் தடயவியல் துறைக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐஐடி ஏரோ ஸ்பேஸ் துறை இணை பேராசிரியர் சுபம் பானர்ஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுபம் பானர்ஜி கடந்த 2019ம் ஆண்டில் இருந்து சென்னை ஐஐடியில் உள்ள ஏரோ ஸ்பேஸ் துறையின் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் துறையில் பிஎச்டி பட்டப்படிப்பும் படித்து வருகிறார். திருமணம் ஆகாத இவர் ஐஐடியில் உள்ள ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

பொதுவாக ஐஐடி ஆய்வகத்தில் மாணவிகள் ஆய்வக தேர்வு தொடர்பாக நள்ளிரவு வரை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இணை பேராசிரியர் என்பதால், அவர் கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் இருக்கும். பயிற்சியின் போது கழிவறைக்கு செல்லும் மாணவிகளை சுபம் பானர்ஜி கண்காணிப்பார். அப்போது, மாணவிகள் யாரேனும் தனியாக கழிவறைக்கு சென்றால் அவர், சத்தம் இல்லாமல் மாணவிகள் கழிவறைக்கு சென்று தனது செல்போனில் வீடியோ எடுத்து வந்துள்ளார். இதற்காக கழிவறைகளுக்கு இடையே உள்ள தண்ணீர் குழாயை செல்போனில் வீடியோ எடுக்க பயன்படுத்தி வந்துள்ளார். பின்னர் கழிவறையில் இருந்து மாணவிகள் வெளியே சென்றதும், சுபம் பானர்ஜி யாருக்கும் சந்தேகம் வராதபடி ஆய்வகத்திற்கு சென்று விடுவார். இதுபோல் கடந்த 3 மாதங்களாக அவர் ஐஐடி மாணவிகளை பல கோணங்களில் வீடியோ எடுத்து வந்துள்ளார்.

பின்னர் கழிவறையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை நள்ளிரவில் தனது அறையில் தனிமையில் ரசித்து பார்த்து வந்துள்ளார். இதை அனைத்தையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஏரோ ஸ்பேஸ் துறையின் இணை பேராசிரியர் என்பதால் அவர், கழிவறையில் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை காட்டி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாணவிகள் யாரையாவது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் தடயவியல் துறை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சோதனை அறிக்கை வந்த பிறகுதான் எத்தனை மாணவிகளை அவர், வீடியோ எடுத்துள்ளார் என்று முழு விவரமும் தெரியவரும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இரண்டாவது சம்பவம்
சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட  பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐயில் நடந்து வரும் நிலையில் மற்றொரு சம்பவமான  இணை பேராசிரியர் மாணவிகளை தனது செல்போனில் ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : IIT ,Chennai ,Associate Professor , Pornography , students, cell phone,IIT ,arrested
× RELATED கொரோனா பாதித்தவரை கண்காணிக்க ரிமோட்: ஐஐடியில் உருவாக்கம்