×

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் தடையை மீறி பேரணி: ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் திரண்டனர்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், வண்ணாரப்பேட்டையில் தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தடையை மீறி பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் சென்னை நகரமே ஸ்தம்பித்தது. மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டமும் நடந்தன.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இருந்தாலும் நாடுமுழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மாநிலம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்கள் மற்றும் பேரணி, மனித சங்கிலி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி அதை குடியரசு தலைவரிடம் வழங்கினர்.

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 500 பேர் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்து. இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பெண்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர்.அமைதியான வழியில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் 6வது நாளாக இஸ்லாமிய அமைப்புகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, 23 இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் 19ம் தேதி தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்திற்கு சென்னை மாநகர காவல் துறை அனுமதி மறுத்தது. சென்னை உயர் நீதிமன்றம் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும் 23 இஸ்லாமிய அமைப்புகள் போலீசார் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தடையை மீறி திட்டமிட்டப்படி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டாக அறிவித்தனர்.அதைதொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி சென்னை மாநகரம் முழுவதும் ேநற்று முன்தினம் இரவு முதல் பல இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தலைமை செயலகத்தை சுற்றிலும்
தடுப்புகள் அமைத்து 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 23 இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் திட்டமிட்டப்படி நேற்று காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பெண்கள் ஒன்று கூடினர். இதனால் சேப்பாக்கம் வாலாஜா சாலை, காமராஜர் சாலைகளில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் இணை கமிஷனர் சுதாகர் தலைமையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் வாலாஜா சாலை முதல் காமராஜர் சாலை வரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றை உருவாக்கி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. இதுதவிர 7 டிரோன் மூலம் போராட்டக்காரர்களை போலீசார் கண்காணித்தனர். கண்ணீர் புகை வீசும் வஜ்ரா வாகனம், 2 தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.பின்னர் திட்டமிட்டப்படி சேப்பாக்கம் கலைவானர் அரங்கத்தில் இருந்து 23 இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் சென்னை தலைமை செயலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லிக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழக வாழ்வுரிமை கட்சி என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.ஒரே நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை பகுதிகளில் இருந்து வந்த  பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர் குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிக்கு எதிராக பதாகைகள், தேசிய கொடிகள் பிடித்து கொண்டும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி கலைவாணர் அரங்கில் இருந்து பேரணி புறப்பட்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே கயிறுகள் மற்றும் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இந்த முற்றுகை போராட்டத்தில் போலீசார் போன்று எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் தடுக்க இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆண்கள் மற்றம் பெண் தன்னார்வலர்கள் மூலம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கட்டுப்படுத்தினர். அனைவரும் அமைதியான முறையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி சேப்பாக்கத்தில் பேரணியை முடிந்தனர். சேப்பாக்கம் முதல், அண்ணாசாலை வரை கூட்டம் திரண்டிருந்தது. பின்னர் பேரணியாக வந்த இஸ்லாமிய அமைப்பு மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பேசினர். முற்றுகை போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டதால் சேப்பாக்கம் வாலாஜா சாலை, ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, அண்ணாசாலை மற்றும் காமராஜர் சாலை, ராஜாஜி சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. சென்னையை போன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

20 ஆயிரம் பேர் மீது வழக்கு
போராட்டத்திற்கு சென்னை மாநகர காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், 23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தடையை மீறி ஒன்று கூடியதாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Muslims ,Chennai ,Muslims Rally , Urging, Citizenship Amendment Act, Chennai
× RELATED நோன்பு கஞ்சி குடித்தபோது பல்செட்டை...