×

தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமித் ஷா காஷ்மீரில் சுதந்திரமாக சென்று வருவாரா?... மாஜி முதல்வர் மெஹபூபா முப்தி மகள் காட்டம்

புதுடெல்லி: அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரில் சுதந்திரமாக சென்று வருவாரா? என்று முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி மகள் காட்டமாக தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 7 மாதங்கள் ஆன நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை காரணம்காட்டி அம்மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 37வது பிரிவு என்பது இந்தியாவின் பிற பகுதிகளுடன் காஷ்மீருக்கான உணர்ச்சிபூர்வமான தொடர்பு. அதன் விதிகளை ரத்து செய்தது தவறானது. நான் மெஹபூபா முப்தியின் மகள் மட்டுமல்ல; வேதனையில் தவிக்கும் காஷ்மீரியாகவும் பேசுகிறேன்.

பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபின், அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜம்மு-காஷ்மீர் பொருளாதார, உளவியல் மற்றும் உணர்ச்சி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மத்திய அரசாங்கம் தவறான தகவல்களை பரப்புகிறது. நாட்டின் பிற பகுதிகளுக்கும், காஷ்மீருக்கு சென்ற தூதர்களுக்கும் நாங்கள் சம உரிமைகளை அனுபவிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் நீங்கள் நினைப்பது போல் காஷ்மீரின் நிலைமை இல்லை. எனக்கு பிரதமர் மீது மரியாதை உண்டு. ஆனால் அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார். காஷ்மீரிகளுக்கு இப்போது என்ன உரிமைகள் உள்ளன? தனியார் நெட்வொர்க் மூலம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினால் வழக்கு பதிவு செய்கின்றனர். நாளை என் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம். காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.

‘நீங்கள் இந்தியாவுக்கு பக்கபலமாக இருந்தீர்கள்; உங்களுக்கு என்ன கிடைத்தது?’ என காஷ்மீரிகள் அரசியல்வாதிகளிடம் கேட்கின்றனர். அவர்கள் அரசாங்கத்தின் மீது கோபத்தில் உள்ளனர். இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீரில் சுதந்திரமாக  சென்று வந்தால், நான் அவருக்கு வணக்கம் செலுத்துவேன். நான் அரசியலில் பங்கேற்பது குறித்து இதுவரை சிந்திக்கவில்லை. காஷ்மீரிகளுக்கு மட்டும் நிலைமை மோசமாக உள்ளது என்று நான் நினைக்கவில்லை. நாடு முழுவதும் நிலைமை மோசமாகிவிட்டது. இன்றைய இந்தியாவில் மக்களிடையே நச்சுத்தன்மை பரப்பப்படுகிறது. அரசியலமைப்பாக இருக்க வேண்டிய ஒரே ஒரு புனித புத்தகம் இருக்க வேண்டும். அதில் கூறப்பட்டுள்ள கொள்கைகளையும் மதிப்புகளையும் நாம் நிலைநிறுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kashmir ,Amit Shah ,leaders , Amit Shah, Kashmir, Ildija Mufti
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...