பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட 2ம் சுற்று தண்ணீர் இன்று நிறுத்தம்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட 2ம் சுற்று தண்ணீர் இன்று மாலை நிறுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள ஒற்றைப்படை மதகுகளுக்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 31ம் தேதி வரை 6 சுற்று தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதல்சுற்று தண்ணீர் ஜன. 9 முதல் ஜன. 25ம் தேதி வரையிலும் 2ம் சுற்று தண்ணீர் கடந்த பிப். 5ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 2ம் சுற்று தண்ணீர் இன்று மாலையுடன் நிறுத்தப்படுவதாகவும், 3ம் சுற்று தண்ணீர் இன்று முதல் 10 நாட்கள் கழித்து திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 98.18 அடியாகவும் நீர் இருப்பு 27.3 டி.எம்.சி. யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 357 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1300 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1250 கனஅடி நீரும் என மொத்தம் 2550 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: