×

தேனி மாவட்டத்தில் அடியோடு வீழ்ந்தது சுற்றுலா தொழில்: வாடகை வாகனம் ஓட்டும் 8 ஆயிரம் பேர் தவிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் சுற்றுலா தொழில் அடியோடு வீழ்ந்து விட்டது. வாடகை வாகனம் ஓட்டும் 8 ஆயிரம் பேர் வருவாய் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தளங்களை கொண்ட மாவட்டம். வேறு மாவட்டங்களில் இருந்து கேரளா வரும் பலர் தேனி மாவட்டத்தில் இரண்டு நாள் தங்கி சுற்றிப்பார்ப்பது வழக்கம். தவிர தேனி மாவட்டத்தை சேர்ந்த பல லட்சம் பேர் ஆண்டு தோறும் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வருவார்கள். இவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல தேனி மாவட்டத்தில் சிறிய மற்றும் பெரிய ரகங்களை சேர்ந்த 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா தொழில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.

தவிர வெளி மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. தொழில் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி, வேலை வாய்ப்புகள் பறிபோனது, பணப்புழக்கம் சரிவு போன்ற காரணங்களே சுற்றுலா தொழில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ஏற்கனவே வருவாய் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வாகனம் ஓட்டுனர்களுக்கு அரசும் விதிமுறைகளை கடுமையாக்கி மேலும் நெருக்கடி கொடுத்துள்ளது.  வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் லைப் டாக்ஸ் எனப்படும் வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் பராமரிப்பு செலவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பல்வேறு காரணங்களால் சுற்றுலா வாகனம் ஓட்டுபவர்கள் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளனர். இதனால் பலரும் தங்களது வாகனத்தை விற்று விட்டு, வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். பலர் ஆக்டிங் டிரைவர்களாக மாறி விட்டனர்.

பலர் ஆட்டோ ஓட்டுனர்களாக மாறி விட்டனர். இது குறித்து கோடாங்கிபட்டியை சேர்ந்த லோகநாதன் கூறுகையில்,‘‘ சொந்த பயன்பாட்டிற்கு வாகனங்களை வாங்குபவர்கள் அதனை சுற்றுலாவிற்கு வாடகைக்கு விடுகின்றனர். சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மிக குறைந்த கட்டணத்திற்கு வாடகைக்கு விடுகின்றனர். தவிர சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் செல்லும் போதும், ஆர்.டி.ஓ., பெர்மிட், மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் பெர்மிட் வாங்குவது மிக, மிக எளிது. சுற்றுலா வாகனங்களில் சென்றால் ஆர்.டி.ஓ., பெர்மிட், எல்லை சோதனை சாவடி பெர்மிட்களுக்கு கட்டணம், தனியாக லஞ்சப்பணம் என ஏராளமாக செலவிட வேண்டி உள்ளது. இது போன்ற காரணங்களால் சொந்த வாகனங்களை வைத்திருப்பவர்களிடம் வாடகைக்கு எடுத்து, டீசல் போட்டு, ஆக்டிங் டிரைவர் வைத்து செல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் வேலை இழந்த சுற்றுலா வாகனம் ஓட்டுபவர்கள் தங்களது வாகனத்திற்கு தவணை கட்ட முடியாமல் வாகனத்தை விற்்று விட்டு ஆக்டிங் டிரைவராக சென்று விடுகின்றனர். இதனை தடுக்க சுற்றுலா வாகனம் ஓட்டுபவர்களுக்கு அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது, இன்சூரன்ஸ், லைப் டாக்ஸ் உள்ளிட்ட வரிச்சலுகை செய்வது, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும். தேனி மாவட்டத்தில் மட்டும் இந்த தொழிலை நம்பி 8 ஆயிரம் பேர் இருக்கிறோம். நாங்கள் வருவாய் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்’’என்றார்.


Tags : tourist places ,Theni district , Theni, Tourism Industry
× RELATED கோம்பை பகுதியில் வாகன...