பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது கொடூர வாலிபருக்கு ஆயுள்: கோவை மகிளா கோர்ட் தீர்ப்பு

கோவை: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தததால் அதற்கு காரணமான கொடூர வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை கணபதி பகுதியை சேர்ந்த 35 வயதான பெண், கணவனை பிரிந்து வசித்து வந்தார். இந்த பெண்ணுக்கு 15 வயது மற்றும் 17 வயதில் மகள்கள் உள்ளனர். 15 வயது மகளுக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருந்தது. இதனால் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டு வீட்டில் இருந்தார். இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த, கூலி தொழிலாளி கீர்த்திராஜ் (24) அடிக்கடி 15வயது சிறுமியை சந்தித்து பேசும்போது காதலிப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் சிறுமி காதலை ஏற்கவில்லை. ‘’என்னை காதலிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று கீர்த்திராஜ் மிரட்டியதால் பயந்துபோன சிறுமியை காதலை ஏற்றார். இதையடுத்து வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று சிறுமியை கீர்த்திராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறு பலமுறை பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கீர்த்திராஜை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா நேற்று அளித்த தீர்ப்பில், ‘’குற்றம் சாட்டப்பட்ட கீர்த்திராஜ்க்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தைக்கு 2 லட்ச ரூபாய் என 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

Related Stories: