இந்தியாவில் கடந்த 5 ஆண்டில் மட்டும் சிங்கத்தின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டில் மட்டும் சிங்கத்தின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவை தங்களுடைய வசிப்பிடத்தை அதிகரித்து வருகின்றன. கடந்த காலங்களில் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என பல நாடுகளில் சிங்கங்கள் வசித்து வந்தன. ஆனால், இப்போது பல நாடுகளில் சிங்கங்கள் அழிந்து விட்டன. ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவில் குஜராத்தில் உள்ள கிர் காடுகளிலும் மட்டுமே சிங்கங்கள் காணப்படுகின்றன. சிங்கங்களில் ஆப்பிரிக்க சிங்கங்கள், ஆசிய சிங்கங்கள் என 2 வகை உள்ளன. இதில், குஜராத்தில் வாழும் சிங்கங்கள் ஆசிய வகையை சேர்ந்தவை ஆகும். அதன்படி இந்த வகை சிங்கங்கள் உலகில் குஜராத்தில் மட்டுமே காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் நடந்த வேட்டை, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் இவை பெருமளவு அழிவை சந்தித்தன. 1985-ல் 239 சிங்கங்கள் மட்டுமே அங்கு வசித்தன. இதை கவனிக்காவிட்டால் இந்த இனவே அழிந்து விடலாம் என்ற நிலை உருவானது. எனவே, மத்திய-மாநில அரசுகள் சிங்கங்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தன. இதன் விளைவாக படிப்படியாக சிங்கத்தின் எண்ணிக்கை வளர்ந்தது. 2015-ம் ஆண்டு இதன் எண்ணிக்கை 503 ஆக உயர்ந்தது. அதன்பிறகு இப்போது மீண்டும் சிங்கத்தின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அதில், அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கங்கள் வசிப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது கடந்த 5 ஆண்டில் மட்டுமே சிங்கத்தின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த சிங்கங்கள் வசிக்கும் கிர் காடுகள் 22 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவை தங்களுடைய வசிப்பிடத்தை அதிகரித்து வருகின்றன. புதிய இடங்களையும் வசிப்பிடமாக மாற்றி வருகின்றன. இதற்காக ராஜ்கோட், ஜாம்நகர் தேசிய நெடுஞ்சாலைகளையும் தாண்டி சவுராஷ்டிரா கடற்கரை வரை இருப்பிடத்தை உருவாக்கி உள்ளன. அதே நேரத்தில் இவ்வாறு சிங்கங்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து இருப்பதும், அவற்றின் இருப்பிடத்தை விஸ்தரித்து வருவதாலும் வேறு சில ஆபத்துகளும் இருக்கின்றன. அதாவது உள்ளூர் விலங்குகள் மூலமாக நோய் தொற்று போன்றவை சிங்கங்களுக்கு பரவி விட்டால் அதனால் சிங்கம் இனமே அழியும் ஆபத்தும் உள்ளன.

எனவே, மாநில அரசு இதில் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. 2018-ம் ஆண்டு டிஸ்டம்பர் என்ற ஒரு வகை வைரஸ் தாக்குதலால் 26 சிங்கங்கள் ஒரு மாதத்தில் உயிர் இழந்தன. அதன் பிறகு அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அதுபோல் வேறு புதிதான நோய்கள் தாக்கி விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இங்குள்ள சிங்கங்களை வேறு பகுதிக்கு கொண்டு சென்று புதிதாக சிங்கம் வளரும் காடுகளை உருவாக்கலாமா? என்ற யோசனை இருந்து வருகிறது.

Related Stories: