×

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் பெருமக்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். கீழடியில் கடந்த 2018ம் ஆண்டு அகழாய்வு பணி நடைபெற்றது. முதல் 3 கட்ட அகழாய்வு பணியினை மத்திய தொல்லியல் துறையினர் நடத்தினர். 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வு பணியினை தமிழக தொல்லியல் துறையினர் நடத்தினர். கடந்த 2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் மற்றும் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டது. மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்தன. 2018ம் ஆண்டு நடந்த நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில், கட்டட சுவர், உறைகிணறு, அரசு முத்திரை, பானை ஓடுகள், இரும்பு மற்றும் செப்புக்காசுகள், முத்து, பவளம் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கிடைக்கப்பெற்றன.

இதையடுத்து, மத்திய அரசு கண்டெடுத்த அந்த அகழாய்வு பொருட்களை பெங்களூர் கொண்டு சென்று அங்கு கண்காட்சி அமைத்துள்ளனர். தொடர்ந்து மாநில அரசு கண்டெடுத்த  பொருட்களை மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க கட்டிடத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று 6ம் கட்ட அகழாய்வு பணியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் பெருமக்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தனர். 6ம் கட்ட அகழாய்வு பணிக்காக இடத்தினை ஜெ.சி.பி. இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டு ஏக்கர் இடத்தில் இந்த அகழாய்வு பணியினை தொடங்கவிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை ஆட்சி தலைவர் ஜெயகாந்தன், தொல்லியல்துறை மற்றும் அகழ்வாராய்ச்சியின் இணை இயக்குனர் சிவானந்தம், அகழாய்வு நல பொறுப்பாளர், தாசில்தார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலையிலேயே இந்த நிகழ்வானது நடைபெற்றது.

Tags : Sivagangai district ,Edappadi Palanisamy ,phase , Sivaganga, Adigadi, Sixth Phase
× RELATED மாவட்டம் முழுவதும் பறக்கும் படையுடன் இணைந்து ஆயுதப்படை போலீஸ் சோதனை