சிவகாசி-ஆலங்குளம் சாலையில் எச்சரிக்கை பதாகைகள் இன்றி பாலம் கட்டும் பணி: நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்

சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே கல்லமநாயக்கன்பட்டி சாலையில் எச்சரிக்கை பலகை எதுவும் இன்றி பாலம் கட்டும் பணி நடப்பதால் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்துகுள்ளாகும் ஆபத்து நிலவுகிறது. சிவகாசியிலிருந்து ஆலங்குளத்திற்கு மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை தற்போது 5 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து ஆலங்குளத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த சாலை வழியாக இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு சிமிண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு வரும் லாரிகள், பட்டாசு ஆலை வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் ஆலங்குளம் சாலையில் செல்கின்றன.

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும் அதிகளவில் சென்று வருகிறது. இந்த சாலையில் உள்ள கல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் தரைப்பாலம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் பக்கவாட்டில் இருபுறமும் பெரிய அளவிலான குழிகள் தோண்டி தடுப்புச்சுவர்கள் கட்ட கம்பி கட்டும்பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் கடந்த ஒரு வாரகாலமாக நடந்து வருகிறது. இங்கு பாலம் வேலை நடைபெறுகிறது என்ற எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை.

பாலத்தின் பக்கவாட்டில் பெரிய பள்ளம் உள்ளதால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் குழிக்குள் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் ஆபத்து நிலவுகிறது. மேலும் கம்பிகள் நீட்டிக் கொண்டு இருப்பது இரவில் தெரியாததால் டூவீலரில் செல்வோர் விபத்துகுள்ளாகி கம்பியில் சிக்கி பலியாகும் ஆபத்து உள்ளது. பாலம் கட்டும் பணி பல நாட்களாக நடந்து வந்த போதிலும், எந்தவித எச்சரிக்கை பதாகைகளும் வைக்காமல் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியமாக உள்ளனர். இங்கு வளைவு பகுதி உள்ளதால் வேகமாக வரும் வாகனங்கள் அருகில் வந்தவுடன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் ஆபாயம் உள்ளதால் எச்சரிக்கை பாதாகைகள் வைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: