மூணாறு அருகே சீரமைக்கப்படாத தேவிகுளம் சுகாதார மையச் சாலை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

மூணாறு: மூணாறு அருகே, தேவிகுளம் ஆரம்ப சுகாதார மையத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக சீரமைக்கப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். கனமழையால் சேதமடைந்த இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறு அருகே, தேவிகுளம் பஞ்சாயத்து உள்ளது. இங்கு பழங்குடி மக்கள் மற்றும் பொதுமக்களுக்காக ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு பெய்த கனமழையில், ஆரம்ப சுகாதார மையம் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு பயங்கர சேதமடைந்தது. இதனால், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் போக்குவரத்துக்கு மிகவும் பாதிக்கப்பட்டனர்.

Advertising
Advertising

மண்சரிவு ஏற்பட்டு பல மாதங்களாகியும், இந்த சாலையை முற்றிலும் சீரமைக்க நடவடிக்கை இல்லை. மிகவும் சேதமடைந்த ஒரு சில பகுதிகளில் மணல் மூட்டையை அடுக்கி வைத்துள்ளனர். சாலையில் இருந்த குண்டும், குழிகளை சீரமைக்க நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு நாளும் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும்போது அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலையில், ஒவ்வொரு நாளும் தோட்ட தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய இடுக்கி மாவட்ட துணை ஆட்சியரும், தேவிகுளம் பஞ்சாயத்து தலைவரும் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், மூணாறில் சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்கும் துணை ஆட்சியர், தேவிகுளம் ஆரம்ப சுகாதார மையம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: